பதிவு செய்த நாள்
09
மே
2025
02:05
சித்திரை.. விருப்பம் நிறைவேறும்: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து, தொழிலிலும், வியாபாரத்திலும் அக்கறையை அதிகரிப்பார். பணியில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். முயற்சிக்கேற்ற ஆதாயம் அளிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரித்து, உங்கள் கனவுகளை நனவாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கையுடன், வீடு, மனை, வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். சிலருக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எடுக்கும் வேலைகளை லாபமாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை வழங்குவார். தொழில், வியாபாரத்தின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையை சிலருக்கு உண்டாக்குவார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 2,4,6 ம் இடங்களுக்கு வழங்குவதால், குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். நோய்கள் தீரும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வழக்கில் இருந்த சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் தோன்றும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.
சனி சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், செல்வாக்கு உயரும். நோய் விலகும். எதிர்ப்புகள் மறையும். நினைத்ததை சாதிக்கவும், எடுத்த வேலைகளை முடிக்கவும் முடியும். மார்ச் 6 முதல் 7ம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் தவறானவர்களின் நட்பு ஏற்படும். வாழ்க்கை தடுமாறும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடியும், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடும் தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தான சனியால், குடும்பத்தில் பிரச்னைகளும் போராட்டமுமாக இருக்கும். பிள்ளைகளால் நெருக்கடி, அவமானம் உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உயர் கல்வி முயற்சியில் தடைகளும், வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். மார்ச் 6 முதல் உங்களுக்கிருந்த நெருக்கடி இல்லாமல் போகும். உடல் நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை சாதிக்கக்கூடிய நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு ராகு 6 ல், கேது 12 ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி, அவமானம், போராட்டம் விலகும். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் அதற்கேற்ற வருமானம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். 3,4ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னைகளும், உறவினருக்குள் பகையும், சொத்து விவகாரத்தில் சண்டை சச்சரவுகளும், பிள்ளைகளால் அவமானமும் ஏற்படும். அதே நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தேவை பூர்த்தியாகும்.
சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை நிறைவேற்றி வைப்பார். வேலைக்காக எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு, அக்.10 – டிச.6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 29, டிச.6 – ஜன.14, ஏப்.1 – மே26 காலங்களிலும் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிரி தொல்லை விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். 1,2 ம் பாதத்தினருக்கு
10ம் இட குருவின் பார்வைகளும், 6ம் இட சனி, ராகு சஞ்சாரமும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தான குருவும், லாப கேதுவும், யோகப் பலன்களை வழங்குவர். 4ம் பாதத்தினருக்கும் சூரிய, செவ்வாய் சஞ்சாரங்கள் செல்வாக்கை உயர்த்தும். முன்னேற்றத்தை உண்டாக்கும்.
தொழில்
1,2 ம் பாதத்தினருக்கு 10ல் குரு, 6ல் ராகு, சனி, 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தரும். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த பொருட்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், மருந்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கல்வி நிறுவனம், நிதிநிறுவனம், ஸ்டேஷனரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன்ஸ், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் நல்ல லாபம் தரும்.
பணியாளர்கள்
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வும், ஊதியமும் கிடைக்கும்.
பெண்கள்
இக்காலம் மிகவும் யோக காலமாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
கல்வி
குரு பகவானின் சஞ்சாரத்தால் படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
உடலில் பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய்களும் தொற்று நோய்களும் இயற்கை வைத்தியத்தால் குணமாகும்.
குடும்பம்
குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பை உண்டாக்குவீர்கள்.
பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி..குருபார்வை வந்தாச்சு
யோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள், திறம்பட செயல்படக் கூடியவர்கள். நினைத்ததை சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். எந்தவொரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களான உங்களுக்கு, தன் பார்வைகளின் வழியாகவே ஜாதகருக்கு சுபப்பலன் வழங்கும் குரு பகவான் மே 11 முதல் பாக்ய ஸ்தானமான 9ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 9ம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானமாகும். இந்த இடத்தை வைத்து தான் அரசாங்கத்தால், தந்தையால் அடையக் கூடிய நன்மையைத் தெரிந்து கொள்ளலாம். கிடைக்கப் போகும் பாக்கியம், செய்யப் போகும் புண்ணிய செயல்களை தெரிந்து கொள்ளலாம். 9 ம் இடத்திற்கு வரும் குருபகவான் உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார். பகைவர்களை உங்களிடம் சரணடைய வைப்பார். பிரச்னை என மன வருத்தம் எல்லாம் சூரியனைக் கண்ட பனியாக மறையும். திருமணம் கூடி வரவில்லையே என்ற கவலை தீரும். வீட்டில் மங்கள வாத்தியம் கேட்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். பொன், பொருள் சேரும். இருப்பிடத்தை சிலர் மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு வெளியூர் வாசம் அமையும். அதனால் நன்மையே உண்டாகும். கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். பொதுவில் இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்தெல்லாம் நடக்கும்.
பார்வைகளின் பலன்
குரு தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கும், 3,5 ம் இடங்களுக்கும் குருபார்வை உண்டாவதால்,
உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆயுள் பற்றிய அச்சம் விலகும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். தொழில் விருத்தியாகும். கடன் அடைபடும். நோய்கள் குணமாகும். அரசியல், எழுத்து, பேச்சு, செயல் எல்லாம் முன்னேற்றம் அடையும். தைரியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, ஆலய தரிசனம் என மனம் செல்லும். சகல சவுபாக்யங்களும் உண்டாகும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பமடையும். அனைத்திலும் இடையூறு, இன்னல்கள் தோன்றும். உங்கள் தகுதிக்கும் கீழானவர்களால் கலகம், பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை. தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். உயர் கல்வி முயற்சியில் தடை, வியாபாரம் தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை, கடன் தொல்லை ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சத்ரு ஜெய ஸ்தான சனியாக சஞ்சரிப்பதால், உடல் நிலையில், மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில், பணி, அரசியல் வாழ்க்கை மேன்மை அடையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழந்து போவர். இழுபறி வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும்.
ராகு, கேது சஞ்சாரம்
5 ம் இட ராகுவால், எந்த ஒன்றிலும் நிம்மதியில்லா நிலை. தொழிலில் பிரச்சினைகள், உத்தியோகத்தில் சங்கடங்கள், குடும்பத்தில் நெருக்கடிகள், அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் என்று எதிர்மறையான பலன்கள் ஏற்படும் என்றாலும், 11 ம் இட கேதுவால், இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு காலம் உண்டாகும். என்றோ செய்த முதலீடுகளில் இருந்து லாபம் வரும். செய்து வரும் தொழில் சிறப்படையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் என்று உண்டாகும். பொன் பொருள் சேரும். நீங்கள் எதிர்பார்த்து ஏக்கப்பட்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும் உங்கள் கைக்கு வரும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்சினைகள், வழக்குகள் முடிவிற்குவரும். இக்காலத்தில் ஒரு சாதனையாளராக நீங்கள் நிமிர்ந்து நிற்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
சூரிய சஞ்சாரம்
ஜூலை17 - செப்.16, டிச.16 - ஜன.14, மார்ச் 15 - ஏப்.13 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரத்தால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார். நினைத்ததை நடத்தி வைப்பார். தொழிலில் தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூன் 8 - ஜூலை 29, டிச.6 - 2026 ஜன.14, ஏப்.1 - மே 26 காலங்களில் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். உங்களை எதிர்த்தவர்கள் நிலை பலவீனமாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு வெற்றியாகும்.
பொதுப்பலன்
பாக்ய குருவின் சஞ்சாரமும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், சூரிய, செவ்வாய் சஞ்சாரமும் போட்டி போட்டு உங்களுக்கு யோகப் பலன்களை வழங்குவர்.
தொழில்
பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் தடைபட்ட வர்த்தகம் வளர்ச்சி அடையும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், டிராவல்ஸ், கமிஷன் ஏஜன்சி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, ஆயத்த ஆடை, நவீன சாதனம், பேன்சி ஸ்டோர், சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் வருமானம் கூடும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியில் இருந்த குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் பொய்யானவை என்ற முடிவிற்கு வரும்.
பெண்கள்
குடும்பத்தில் நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பணியில் முன்னேற்றம் உண்டாகும்.
கல்வி
குரு பகவானின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் படிப்பில் புகழடையும் காலமாக இக்காலம் இருக்கும். படிப்பின்மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை
உடல் நிலையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், பரம்பரை, தொற்று நோயால் சங்கடம் உண்டாகும். பி.பி, சுகர் போன்றவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும் என்றாலும் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
குடும்பம்
பாக்கிய குருவும், லாப கேதுவும் நன்மை வழங்க இருப்பதால், குடும்பத்தில் சங்கடம் விலகும். நிம்மதி உருவாகும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் அமையும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம், குழந்தை பேறு என கடமைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உறவினரிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை சேரும்.
விசாகம்.. முயற்சி வெற்றியாகும்: மங்களகாரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழிலில் முன்னேற்றம், பணியில் எதிர்பார்த்த உயர்வு, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், சமூக அந்தஸ்து, குடும்பத்தில் மகிழ்ச்சி, பணப்புழக்கம், படிப்பில் வெற்றியை வழங்குவார். 4ம் பாதத்தினருக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உடல்நலக்குறைவு, உறவினரிடம் விரோதம், தொழிலில் தடை, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2,3ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை ஜென்ம ராசி மற்றும் 3, 5 ம் இடங்களுக்கு வழங்குவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். கனவுகள் இப்போது நனவாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். உடல் பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கூடும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு, 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் வீண் செலவு கட்டுப்படும். நெருக்கடி குறையும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உழைப்பு, அலைச்சல்களின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சகோதரரால் சங்கடம், நண்பர்களிடம் பகை உண்டாகும்.
சனி சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பம் அடையும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை, தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீக சொத்தில் வழக்கு ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உடல் பாதிப்புகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை, 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளால் சச்சரவுகள் தோன்றும். தவறான நட்பால் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், மனதில் இருந்த நிம்மதி போகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவுகளுடன் பகை, உயர்கல்வி முயற்சியில் தடை, பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும், தொழிலில் பிரச்னை, வேலையில் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேரும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் முடிவிற்கு வரும். 4ம் பாதத்தினருக்கு ராகு 4 ல், கேது 10 ல் சஞ்சரிப்பதால் சாதாரணமாக முடிய வேண்டிய வேலைகளில் இழுபறி ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவாகும். தொழிலில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வர்.
சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். அரசுவழியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 29, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – மே 26 காலங்களிலும், ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் தன் 3, 6, 11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சியை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். கனவுகளை நனவாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கை வெற்றியாக்குவார்.
பொதுப்பலன்
1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவின் சஞ்சாரமும், அக்.8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவும், 4 பாதத்தினருக்கும் சூரியனும், செவ்வாயும் யோகப் பலன்களை வழங்க காத்திருக்கின்றனர்.
தொழில்
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட இடையூறு விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி, ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, ஏற்றுமதி இறக்குமதி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, நவீன சாதனங்கள் தொழில்கள் முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
பெண்கள்
குரு பகவானின் சஞ்சாரம், பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கல்வி
மாணவர்களுக்கு இக்காலம் யோக காலமாக அமையும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில் விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை
1,2,3 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள், பி.பி, சுவாசக்கோளாறு, சுகர் என அவதிப்பட்ட நிலை மாறும். 4 ம் பாதத்தினருக்கு உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும்.
குடும்பம்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும் குடும்ப நெருக்கடிகளை நீக்கும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். புதிய வாகனம், சொத்து சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதுவீட்டில் பால் காய்ச்சுவர்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.