பதிவு செய்த நாள்
09
மே
2025
02:05
மூலம்..நீங்க தான் நம்பர் 1
ஞான மோட்சக் காரகனான கேதுவை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்டவர் நீங்கள். உலக அறிவையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிந்து பிறருக்கு வழிகாட்டுவதில் முதலிடம் வகிப்பீர்கள். பெரிய ஆன்மிகவாதியாக நீங்கள் இல்லாமல் போனாலும் பாவ புண்ணியத்தை அறிந்து அதை உணர்த்தி வருபவராக இருப்பீர்கள். உங்கள் ராசிநாதனான குரு பகவான், மே11 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் தன் 7ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கப் போகிறார். குரு பகவான் பார்வை ராசிக்கு கிடைத்திடும் காலம் மிகப் பெரிய யோக காலமாகும். அவரது பார்வையால் உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை, அவமானம், சோதனை எல்லாமும் இருந்த இடம் தெரியாமல் போகும். குரு பார்க்க கோடி புண்ணியம் என இதன் காரணமாகவே சொல்லி வைத்தனர். செல்வாக்கு உயரும். அந்தஸ்து மிக்கவர்களோடு நட்பு உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். நேற்று வரை இருந்த சங்கடமான நிலை இனி இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றமடையும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, வாகனம், சொத்து வசதிகள் அவரவர் ஜாதகத்தின் யோகத்தைப் பொறுத்து அதிகரிக்கும். உடல் நிலையிலும் முன்னேற்றம் தோன்றும். நீங்கள் தான் நம்பர் 1 ஆக திகழ்வீர்கள். ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் ஏற்றமான பலன்களை வழங்குவார்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசி, 11, 3 ம் இடங்களுக்கும் குருபார்வை உண்டாவதால், வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சொத்துகளில் உண்டான வில்லங்கம் முடிவிற்கு வரும். பல வழிகளிலும் பணம் வரும். புதிய சொத்து சேரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் புதிய உற்சாகம் தோன்றும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். புதிய வலிமையோடு நடை போடுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சாதாரணமாக உங்களை எண்ணியவர்கள் எல்லாம் உங்கள் திறமைகளையும் பெருமைகளையும் உணர்வர். எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். நீங்கள் எடுக்கும் செயல்களில் வெற்றியுண்டாகும். தொழில் விருத்தியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். யோகமும் போகமுமாக வாழ்க்கை முன்னேற்றம் அடையும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அதிகரிக்கும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு வேலை அமையும். மற்றவரால் செய்ய முடியாத செயல்களைச் செய்து அதில் வெற்றி அடைவீர்கள்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை, சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால், உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை இருந்த சங்கடம் இனி இல்லாமல் போகும். பொருளாதாரம் உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செய்து வரும் தொழில் சிறப்படையும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். தொல்லை கொடுத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பார். இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, இருப்பிடத்தை மாற்ற வேண்டிய சூழல், தாயின் உடல் பாதிப்பு, தாய்வழி உறவுகளுடன் விரோதம், வீடு, வாகனத்தால் தொல்லை, எதிரி தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், பிரச்னை, வீண் செலவுகள் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
முயற்சி ஸ்தானமான 3ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். நினைப்பது நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், இறையருள் கிட்டும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
சூரிய சஞ்சாரம்
மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் சூரியனால் யோகப் பலன்கள் உண்டாகும். தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். நீங்கள் நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை ஏற்படுத்துவார். பொருளாதார நிலையை உயர்த்துவார்.
செவ்வாய் சஞ்சாரம்
செப்.14 – அக்.27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களில் தன் 11, 3 ம் இட சஞ்சாரங்களால் வரவுகளை அதிகரிப்பார். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண வைப்பார்.
பொதுப்பலன்
7 ம் இடத்தில் குரு, 3ல் ராகு, சனி என்ற சஞ்சாரநிலை கனவுகளை நனவாக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் அவர் வழங்கும் யோகப் பலன்களில் மாற்றம் ஏற்படும் என்றாலும் அவரது பார்வைகளும், சூரியனும், செவ்வாயும் நன்மைகளை அதிகரிப்பர்.
தொழில்
குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் தொழில் துறையில் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். முடங்கிய தொழில் கூட இக்காலத்தில் முன்னேற்றம் பெறும். பைனான்ஸ், ஜுவல்லரி, எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஐ.டி தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்
பணியாளர்களுக்கு யோகமான காலமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை திறமைக்கேற்ற பதவி இல்லை என வருந்திய நிலை மாறும். நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த பொறுப்பு, ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
இக்காலம் செல்வாக்கு உயரும் காலமாக இருக்கும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்புண்டாகும். விலகிய உறவுகள் இக்காலத்தில் உங்கள் உதவிக்காக வருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தை வழிநடத்தும் சக்தி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உதவியால் முயற்சி வெற்றி பெறும். சொத்து, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
கல்வி
உங்கள் ராசிக்கு குருபார்வை உண்டாவதால் மனம் தெளிவாகும். சரியான பாதையில் நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
குரு பார்வையால் அனைத்து வித நன்மையும் கிடைக்கும். உடல் பாதிப்பு இல்லாமல் போகும். மருத்துவச் செலவு குறையும். தொற்று நோய், இதய நோய், சுவாசக் கோளாறு விலகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் நோய்கள் விலகிச் செல்லும்.
குடும்பம்
ஏழாம் இடத்தில் குரு, குருவின் பார்வை ராசிக்கு, சகாய ஸ்தானத்தில் ராகு என்ற நிலையால் உங்களுக்கு கனவாக இருந்த ஒவ்வொன்றும் கைவசமாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம் : குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூராடம்..நினைப்பது நடக்கும்
அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், தனகாரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், எதிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். எது உங்களுக்குத் தேவையோ அதில் மட்டுமே அக்கறை காட்டக் கூடியவர்கள். வெளியில் பார்ப்பதற்கு கண்டிப்பானவர்கள் போல் தெரிந்தாலும் மனதளவில் எப்போதும் குழந்தையாகவே இருப்பவர்கள் நீங்கள். ஞானக்காரகனான குரு பகவான் மே 11 முதல் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன், 7 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கப் போகிறார். குரு ராசியைப் பார்ப்பது பெரும் யோகமாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு சப்தமப் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் குரு, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறார். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். இடம், வீடு வாங்குதல், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை என வாழ்க்கை வளமாகும். பொருளாதார நெருக்கடியால் தவித்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உடல் பாதிப்பு குணமாகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். குடும்ப சொத்தில் வரவேண்டிய பங்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இக்காலத்தை உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். அரசு துறையினருக்கு தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். கடல் கடந்து சென்று ஆதாயம் காணும் நிலை சிலருக்கு உண்டாகும். எதிர்ப்பு என்பது இனி இல்லாமல் போகும். எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்களால் அடைய முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எந்த இடத்திலும் முதன்மையானவராக இருப்பீர்கள்.
பார்வைகளின் பலன்
குரு தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. உங்கள் ராசிக்கும், 11, 3 ம் இடங்கள் மீது குரு பார்வை உண்டாவதால், புதிய நம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும். உடல், மனதில் உற்சாகம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். பழைய முதலீடுகளில் இருந்து வட்டியுடன் பணம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாலினரின் நட்பும், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். பட்டம், பதவி தேடி வரும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை, 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் முயற்சிகள் வெற்றியாகும். செயல்கள் லாபமாகும். நெருக்கடிக்கு ஆளாக்கிய சங்கடங்கள் இல்லாமல் போகும். தைரியமுடன் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், மனதை அலை பாய வைப்பார். தவறானவர்களின் நட்பை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் உழைப்பை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தத்தை ஏற்படுத்துவார். வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வசிக்கும் இடத்தை மாற்றும் சூழல், தாயின் உடல்நிலை பாதிப்பு என சிரமங்களை ஏற்படுத்துவார்.
ராகு, கேது சஞ்சாரம்
3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் திறமை வெளிப்படும். சாதிக்க முடியாதவற்றை சாதிப்பீர்கள். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், தொழிலில் அதிக கவனம் தேவைப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். சொத்து சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். கோயில் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.
சூரிய சஞ்சாரம்
மே 15 – ஜூன் 14, செப்.17 – நவ.16, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இக்காலங்களில் செல்வாக்கு வெளிப்படும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் சஞ்சாரம்
செப்.14 – அக். 27, பிப். 21 – ஏப்.1 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். வியாபாரம் லாபம் தரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்கள் முன்னேற்றம் அடையும் எடுத்த வேலைகள் நடந்தேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
பொதுப்பலன்
குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு பகவான் வழங்கும் யோகப் பலன்களில் மாற்றம் ஏற்படும் என்றாலும், அவருடைய பார்வைகளுடன், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களை உயர்த்தும்.
தொழில்
தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விற்பனை அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், ஆடை ஆபரணம், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், நிதிநிறுவனம், சினிமா, பதிப்பகம், வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி விலகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலைக்காக கடல் கடந்து செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். அரசு பணியாளர், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
குருபார்வை கோடி புண்ணியம் என்பதை உணர்வீர்கள். கனவுகள் நனவாகும். நீண்டநாள் ஆசை பூர்த்தியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். புகுந்த வீட்டினர் உங்களைக் கொண்டாடுவர். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் நிலை உயரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
கல்வி
குரு பார்வையால் படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
தைரிய, வீரிய ஸ்தானத்தில் ராகு, ராசிக்கும் 3 ம் இடத்திற்கும் குருவின் பார்வை இருப்பதால் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும்.
குடும்பம்
ஏழாமிட குருவும், மூன்றாமிட ராகுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். வசதி வாய்ப்பை ஏற்படுத்துவர். செல்வாக்கை உண்டாக்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். குழந்தைப் பேறு கிடைக்கும்.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
உத்திராடம்.. எச்சரிக்கை அவசியம்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர். 1 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். திருமணத் தடை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சொத்து, சுகம், செல்வம், செல்வாக்கோடு வாழ வைப்பார். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரித்து வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். உடல் பாதிப்பை உண்டாக்குவார். செலவுகளையும் அதிகரிப்பார். உற்சாகத்தை குறைப்பார். எதிலும் நாட்டம் இல்லாத நிலையை உருவாக்குவார். தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். எதிரி தொல்லையை அதிகரிப்பார். மனக் கஷ்டத்தோடு பணக்கஷ்டத்தையும் உருவாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். உறவினர்களை உங்களுக்கு எதிராக மாற்றுவார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. 1 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 1, 3, 11 ம் இடங்களுக்கு வழங்குவதால் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வேலையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 10, 12, 2 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார் உடல்நிலையை மேம்படுத்துவார். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், வேலைப் பளுவை அதிகரிப்பார். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். எடுக்கும் வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், வரவு செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவார். மிதுன குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு விலகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எந்த ஒன்றையும் சாதிக்கும் பலம் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு ராகு 3 ல், கேது 9 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் அக்கறை உண்டாகும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல் நிறைவேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ல், கேது 8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாடு சிலருக்கு ஏற்படும். அவமானத்தை சந்திக்க நேரும். உடல் பாதிப்பும் மருத்துவச் செலவும் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகள், அரசு பணியாளர்களின் நிலை உயரும். உடல்நிலை சீராகும்.
செவ்வாய் சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, செப். 14 – அக். 27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப் பற்றாக்குறை விலகும். வியாபாரம், தொழில் லாபமடையும். வர வேண்டிய பணம் வரும். புதிய சொத்து சேரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். தன்னம்பிக்கை, செல்வாக்கு அதிகரிக்கும்.
பொதுப்பலன்
1 ம் பாதத்தினருக்கு குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு நன்மை வழங்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 4 பாதத்தினருக்கும் குருவின் பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகத்தை உண்டாக்கும்.
தொழில்
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஜுவல்லரி, உணவு தானியம், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைப் பேறு கிடைக்கும். கணவரின் அன்பால் பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.
கல்வி
படிப்பில் ஆர்வம் கூடும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை
1 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். மருத்துவச் செலவு குறையும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நோய்கள் வெளிப்படும். சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
குடும்பம்
தம்பதி ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உண்டாகும். பஇடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.