பதிவு செய்த நாள்
07
ஜூலை
2025
01:07
இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த மன்னனை காண முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரை கண்டு கொள்ளவே இல்லை. இதனால், கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின் அவனிடம் தானே வலிய சென்று, "கோரனே! நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால் தான் உனது திக் விஜயம் நிறைவுபெறும்" என்று தனக்கே உரித்தான பாணியில் முடித்து விட்டு அமைதியாக சென்றுவிட்டார். அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனை போரில் வென்றான் அசுரன். நாடு, நகரம் என அனைத்தும் இழந்த மன்னன் சிண்டு காட்டிற்கு சென்றான். அங்கு நாரத முனிவர் இருந்தார். அவரிடம் இவன் நடந்ததை கூறி தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.
நாரதரும் இதற்கான விமோசனத்தை துர்வாசமுனிவர் தான் தர முடியும். அவரிடம் சென்று கெஞ்சினால் நல்வழி காட்டுவார் என கூறி சென்று விட்டார். பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாக துர்வாசமுனிவரை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் தன் நிலையைக் கூறி, நாட்டை மீட்க வழி கேட்டு மன்றாடினான்.துர்வாச அவனிடம், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறுவாய்" என்று கூறிச்சென்றார். இவனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிபட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு கோவிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தான். இவன் கட்டிய கோவில் தான் வல்லக்கோட்டை சுப்பிரமணியர் கோவில்.
வல்லன் என்ற அரக்கனின் கோட்டையாக இவ்வூர் இருந்துள்ளது. இவன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்து வந்தான். பொறுத்து பார்த்த தேவர்கள் இவனது துன்பம் மிகவும் அதிகமானவுடன் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமானும் தேவர்களின் குறைகளை கேட்டு, அசுரன் அழியும் நேரம் வந்துவிட்டது பயப்படவேண்டாம் என்று அபயம் அளித்தார். பின் அசுரனை வதம் செய்து அவனது விருப்பப்படி இவ்வூரை வல்லன் கோட்டையாக்கினார். இதுவே காலப்போக்கில் வல்லக்கோட்டை ஆனது. பிரார்த்தனை இத்தல இறைவனை வழிபட வரும் பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
பால்குடம், முடிகாணிக்கை செலுத்துதல், காது குத்தல் ஆகிய நேர்ச்சைகள் செய்யலாம். திருமணங்களும் நடத்தப்படுகிறது.
இந்திரன் தமது குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுவதற்கு ஒரு சிறந்த இடத்தை உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவரும் பூலோகத்தில் வல்லக்கோட்டை என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டு நலம் பெறுவாய் என அருள்பாலித்தார். உடனே அவனும் இத்தலம் வந்து தன் வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது இஷ்ட சித்திகளை பெற்று சென்றான். எனவே இத்தல தீர்த்தம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
அருணகிரிநாதர் தலயாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு, மறுநாள் திருத்தணி செல்லலாம் என நினைத்து கொண்டே இரவில் அங்கு தங்கினார். இவரது கனவில் கோடைநகர் குமரன் தோன்றி என்ன அருணகிரியாரே வல்லக்கோட்டையை மறந்தனையே, என்று கூறி மறைந்தார். கண்விழித்த அருணகிரிநாதரும் திருத்தணி செல்லும் முன் வல்லக்கோட்டை முருகனை தரிசித்து திருப்புகழ் பாமாலை (8பாடல்) பாடி மகிழ்ந்தார்.
சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து மேற்கே சுமார் 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து பஸ் உள்ளது.
அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோவிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.
7 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய திருமேனி முருகனுக்கு எதிரே இரட்டை மயில்.
ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்,
வல்லக்கோட்டை 602 105 காஞ்சிபுரம் மாவட்டம்.
திறக்கும் நேரம்: காலை 5:30 1:00 மாலை 3:00 8:30
தொடர்புக்கு: +91 44 2717 2777