கல்யாண வரம் தரும் வல்லக்கோட்டை முருகன்
பதிவு செய்த நாள்
07
ஜூலை 2025 01:07
ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் சிறந்த ஒரு தலத்தை கூறியருளுமாறு வினவினான். அதற்குப் பிருகஸ்பதி, பூவுலகில் தொண்டை மண்டலத்தின்கண் பாதிரி மரத்தின்கீழ் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் தலமே உத்தமமானது என்று கூறியருளினர். அதன்படி இந்திரன் இத்தலத்திற்கு வந்து வச்சிராயுதத்தினால் ஒரு தீர்த்தமுண்டாக்கி அத்தீர்த்தத்தைக் கொண்டு சுப்பிரமணியக் கடவுளை அபிஷேகித்தும், பாதிரி மலர்களால் பூஜித்திருந்தும் தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டான். பிறகு இந்திராணியை மணந்து சிறப்புற்றான். இந்திரன் உண்டாக்கிய இத்தீர்த்தம் வச்சிரதீர்த்தம் எனும் பெயருடன் இந்த ஆலயத்தையொட்டி கீழ்திசையில் உள்ளது. இந்தத் திருக்கோயிலின் தலவிருட்சம் பாதிரி மரமாகும். இதன் சிறப்பினைச் சங்க இலங்கியங்கள் தெரிவிக்கின்றன. இது சித்திரையில் மலரும் சிறப்புடையது. இதன் இதழ்கள் குழாய் போன்று வளைந்திருப்பதால் இதனைக் கூன் மலர் என்பர், அம்புவாகினி, பாடலம், புன்காலி முதலிய பிற பெயர்களும் இந்த மலருக்கு உண்டு. இதன் இதழ்கள் வெண்மை, மஞ்சள், செம்மஞ்சள் நிறமுடையது. சிறப்பு பொருந்திய இந்த மரத்தினருகில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்குக் காட்சியருளினார். இந்த கோவிலில் முருக்பெருமான் 7 அடி உயரங்கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கின்றனர் ஆலய பிரகாரத்தின் தென்மேற்கு திக்கில் முக்கால கணபதி சன்னிதி உள்ளது. மூன்று காலங்களிலும் நேரும் பாவங்களையும் விக்கினங்களையும் போக்கும் மூன்று கணபதிகள் ஒரே சன்னிதியில் இங்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். மேற்கு பிரகாரத்தில் உத்சவர் சன்னிதியும், இதனருகே தலமரமாகிய பாதிரியும், வடமேற்கு திக்கில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமானின் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தின் கிழக்கில் இடும்பன், கடம்பன், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் காமிக ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. காலை 8 மணி, 10 மணி, மாலை 5 மணி ஆகிய மூன்று வேளையில் அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரைத் தமிழ் வருடப் பிறப்பு உத்சவம் இங்கு விமரிசையாக நடைபெறுகின்றது. அன்று மூலவரும், உற்சவரும் முத்தங்கி சேவையில் காட்சியருளுவது சிறப்பு. வைகாசி விசாகம், வைகாசி பிரம்மோத்சவம், ஆடிக்கிருத்திகை. ஆடிப் பூரம்,1008 பால்குட அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆங்கில வருடப்பிறப்பு, தைத்கிருத்திகை, தைப்பூசம், மாசி இலட்சார்ச்சனை, பங்குனி உத்திரம் ஆகிய உத்சவங்கள் சிறப்புடன் இங்கு நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலுக்கு ஆறு வாரங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வந்து வணங்குவோருக்கு இழந்த பதவிகள், நிறைவான செல்வங்கள், திருமணப்பேறு ஆகியவை கிடைக்கும். உண்டியல் காணிக்கை, முடி காணிக்கை, துலாபாரம் காணிக்கை, காவடி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. சிறப்புகள் பல பொருந்திய இந்த ஆலயத்திற்கு நாமும் வந்து வணங்கி நற்பலன்கள் பெற்று உயர்வோமாக.
|