கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; எந்த ஒன்றிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். மாதம் முழுவதும் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். நினைத்ததை சாதித்திடும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாகும். குரு பார்வை சப்தம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக் கூடிய பாக்கியம் உண்டாகும். புதிய வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். பணம் பல வழிகளிலும் வரும். பிறருக்கு உதவி செய்திடக் கூடிய நிலை உங்களுக்கு உண்டாகும். ஜீவன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் அலட்சியம் வேண்டாம். அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் சக்திக்கேற்ற, உங்களால் முடிந்த வேலைகளில் மட்டும் ஈடுபடுவது நன்மை தரும். அக். 27 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்டிருந்த பணம் வரும். உறவுகளிடையே ஏற்பட்ட பிரச்னை முடிவடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: அக்.26
அதிர்ஷ்ட நாள்: அக்.19,24,28,நவ.1,6,10,15
பரிகாரம் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்
ரோகிணி; பிறரின் பார்வைக்கு செல்வாக்கு மிக்கவராக திகழும் உங்களுக்கு, புரட்டாசி நன்மையான மாதமாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, வேலையில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவார். தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், புதனும் உங்கள் கனவுகளை நனவாக்குவர். எடுத்த முயற்சி வெற்றியாகும். அரசியல், தொழில், வியாபாரத்தில் உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரணடையும் நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறக் கூடிய நிலையும் சிலருக்கு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு ஏற்படும். சண்டை, சச்சரவின் காரணமாக நீதிமன்ற வாசலில் நின்றவர்களும் சமாதானம் ஆகும் நிலை உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தெய்வ அனுகூலம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு வாங்கும் விருப்பம் பூர்த்தியாகும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புழங்கும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாய்வழி உறவுகளால் சங்கடம், நெருக்கடி ஏற்படலாம். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வயதானவர்களுக்கு உடல்நலம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக்.27
அதிர்ஷ்ட நாள்: அக்.20, 24, 29. நவ. 2, 6, 11, 15
பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்; தெளிவான சிந்தனையுடன் எந்த ஒன்றையும் சாதிக்கும் துணிச்சல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் அக்.27 வரை சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை இல்லாமல் செய்வார். எதிரி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மாதம் முழுவதும் ஆத்ம காரகனான சூரியனும் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அக். 27 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும். குருவின் பார்வைகளால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். மண வாழ்வில் முறிவு, வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடத்தும் நிலை உண்டாகும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். தினப் பணியாளர்களுக்கு கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ராசிநாதன் சுக்கிரன் நவ. 3 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும்.