எதிலும் கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்துவார். உழைப்பை அதிகரிப்பார், அதன் காரணமாக உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இந்த நேரத்தில் ஆயுள்காரகன் சனியும், யோகக்காரகன் ராகுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் அவர்கள் அரண் போல் உங்களைப் பாதுகாப்பர். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலையைச் செய்து முடித்திடக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். பிப்.7 வரை தன குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். கையில் பணம் புழங்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானத்தை வைத்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவதுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன.25,26
அதிர்ஷ்ட நாள்: ஜன.19,23, 28,பிப்.1,5,10
பரிகாரம்: சிதம்பரம் நடராஜரை வழிபட நன்மை உண்டாகும்.
அஸ்தம்
மன வலிமை, புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். தொழில் காரகனான சனி, ராகுவுடன் இணைந்து சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலை மீதிருந்த பயம் போகும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சி இப்போது வெற்றியாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். தேவையான அளவிற்கு பணமும் வந்து கொண்டிருக்கும். புதிய வேலை தொடங்க காத்திருந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கடந்த காலத்தில் இருந்த பண நெருக்கடி மறையும். திறமை மதிக்கப்படும். பிப். 29 முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம் வாங்கவும், விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்கவும் வழியுண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். விரய ஸ்தானத்தில் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாயும் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வதும் நன்மை தரும். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 26, 27.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 23, 29. பிப். 2, 5, 11.
பரிகாரம்
அர்த்தநாரீஸ்வரரை வழிபட சங்கடம் எல்லாம் விலகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்
கோபம் இருந்தாலும் அதை மறைத்து நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு 3 க்கும் 8 க்கும் உடைய செவ்வாய் 5 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது நன்மை தரும். மற்றவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காமல் ஒவ்வொன்றையும் நீங்களே முன் நின்று செய்யும் போது அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும், ராகுவும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். நோய் நொடி இல்லாமல் போகும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் பல மடங்கு உயரும். சொத்து சேரும். அரசியல்வாதிகளுக்கு யோகமான நேரமாக இருக்கும். பிப்.7 வரை அதிர்ஷ்டக்காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, பொன் பொருள் சேர்க்கை, புதிய வாகனம் என்ற நிலை குடும்பத்தில் இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியும். ஜன.29 முதல் நினைத்த செயல்கள் எந்தவித தடையுமின்றி நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் இந்த மாதத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். விளைச்சல் வீடு வந்து சேர வேண்டும் என்றால் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் அக்கறையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட், புதிய முதலீடுகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் வேண்டும். படிப்புதான் உலகம் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துவது அவசியம்.