பதிவு செய்த நாள்
23
ஜன
2013
05:01
திருமணம் என்பது, ஆயிரங்காலத்து பயிர். அனைத்து நாடுகளிலுமே, திருமணங்களை, பல்வேறு கலாசாரங்களின் கீழ், பல்வேறு விதமாக நடத்துகின்றனர். சீனாவின், சிசூவான் மாகாணத்தில், திருமணத்தை விட, திருமணத்துக்கு முன் நடக்கும், சடங்குகளும், சம்பிரதாயங்களும், மிக வித்தியாசமானவையாக உள்ளன. திருமணம் நடப்பதற்கு, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, மணப்பெண், தனியறைக்கு சென்று, தினமும், ஒரு மணி நேரம் அழ வேண்டும் என்பது, இங்கு, எழுதப்படாத விதிமுறையாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, திருமணத்துக்கு, 30 நாட்களுக்கு முன், மணப்பெண், மணக்கோலத்தில், தன் வீட்டில் உள்ள, தனியறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அந்த தனியறையில் அமர்ந்து, 10 நாட்களுக்கு, அவர், தேம்பித் தேம்பி அழ வேண்டும். குறைந்தது, ஒரு மணி நேரமாவது அழ வேண்டும். பதினோராவது நாளிலிருந்து, இந்த அழுகை உற்சவத்தில், மணப் பெண்ணின் தாயாரும் பங்கேற்க வேண்டும். மணப் பெண்ணின் பாட்டி, 21வது நாளிலிருந்து, சேர்ந்து அழ வேண்டும். மணப் பெண்ணின் சகோதரிகளும், இடையிடையே, அழ வேண்டும். அழுகையின்போது, பெண்கள் நாட்டுப்புற பாடல்களை, பெரும் குரலெடுத்து பாடுவர்.
அதேபோல், மணப்பெண், கணவர் வீட்டுக்கு செல்லும் போதும், தன் உறவுப் பெண்களுடன் சேர்ந்து, அழுவதையும், கட்டாய சடங்காக கடைப்பிடிக்கின்றனர். இந்த கலாசாரத்தை, அழுகை திருவிழா என, அந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். மணப் பெண்கள் அழ மறுத்து, பிடிவாதம் பிடித்தால், அவர்களின் தாயாரே, பெரிய குச்சியை எடுத்து, சரமாரியாக அடித்து, தங்கள் மகளை, அழ வைக்கும் சம்பவங்களும், இங்கு வாடிக்கையாக நிகழ்கின்றன. திருமணத்தின் போது, மணப் பெண்கள் அழாவிட்டால், அவர்களின் கணவர் வீட்டில், மகிழ்ச்சி இருக்காது; அவர்களின் குடும்பம் விருத்தி ஆகாது; குடிபுகுந்த வீட்டில், வறுமை தாண்டவமாடும் என, அந்த பகுதி மக்களிடையே, நம்பிக்கை நிலவுகிறது.
சிசூவான் மாகாணத்தில் வசிக்கும், பெரியவர்கள் கூறியதாவது: பண்டை காலத்தில், இந்த பகுதியை ஆண்ட மன்னரின் மகளை, அருகில் உள்ள, பகுதியை ஆண்ட, மன்னரின் மகனுக்கு, திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது, மணமகன் வீட்டுக்கு மணமகள் புறப்படும்போது, தன் தாயாரை கட்டிப் பிடித்து, கதறி அழுதார். தாயாரும் அழுதார். இந்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் தான், தொடர்ந்து இந்த அழுகை திருவிழா நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்கின்றனர்.