பதிவு செய்த நாள்
16
அக்
2026
04:10
துலாம் .. சித்திரை 3, 4 ம் பாதம்: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிறைய முதலீடுகள் செய்தும் அதற்கேற்ற லாபம் கிடைக்கவில்லையே என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளில் பணியாற்றி வருவோரின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெரிய தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் தேடிவரும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தேவைக்கேற்ற பணத்தைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பார். பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 6, 9, 15.
பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் எண்ணி வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
சுவாதி: உயர்ந்த லட்சியமும், வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற கொள்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். சிலருக்கு காதலும் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு அவர்களைப்பற்றிய கவலையும் ஏற்படும். அதே நேரத்தில், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். பெரியோருடைய நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். அவர்கள் வழியே உங்கள் வாழ்க்கைக்குரிய வழிகள் தெரிய ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் எல்லாம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல்வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பம் மற்றும் வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள், பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 28, 29.
அதிர்ஷ்ட நாள்: அக். 22, 24, 31. நவ. 4, 6, 13, 15.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட தடைகள் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: உயர்ந்த லட்சியமும் தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து உத்தியோகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்த குரு பகவான், அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்பட்டு அதில் ஆதாயம் அடைவீர்கள். மனதில் இருந்த போராட்டம் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் போராட்டங்கள் விலகும். வாழ்க்கையில் பிரிவை சந்தித்தவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். கூட்டுத் தொழில் லாபம்தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். கையில் பணம் புரளும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருந்தாலும் உக்கிரமான பலன்களை வழங்குவார் என்பதால் தைரியமுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு போட்டி பகை பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். நீண்ட நாள் முயற்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு அக். 31 முதல் படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: அக். 29, 30.
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 24. நவ. 3, 6, 12, 15.
பரிகாரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு உயரும்.