பதிவு செய்த நாள்
15
ஜூலை
2011
03:07
ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பிறரிடம் அவதூறாகவோ அல்லது எதிர்மறையாகவோ சொல்வது புறங்கூறுதல், கோள்சொல்லுதல். இதிலும் கோள் என்றும் குறளை என்றும் இரண்டு வகை உண்டு. ஒருவரது துர்க்குணங்களைப் பற்றி, அவர் இல்லாதபோது அடுத்தவரிடம் சொல்வது கோள், கற்பனையாக.. இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிக் கூறுவது, குறளை, முன்னதைவிட அடுத்தது மிகவும் தீயது! ஆண்டாள் தனது திருப்பாவையில் பாவை நோன்பு பற்றிக் குறிப்பிடுகிறாள். உணவில் நெய்யும் பாலும் சேர்க்காமல், மலர் சூடிக் கூந்தல் முடிக்காமல், மையிடாத கண்ணுடன் நோன்பு இருப்பார்களாம். செய்யக்கூடாதன என்று சொல்லப்பட்டவைகளையும் செய்யமாட்டார்களாம். குறிப்பாக, தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். இங்கே, தீக்குறளை என்பது தீய செயலான புறங்கூறுதலையே குறிக்கிறது.
மனிதனின் ஐம்புலன்களில், வாய் மூலம் இழைக்கிற பாவப் பட்டியலில், புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். வள்ளுவர்கூட, புறங்கூறாமை பற்றித் தனி அதிகாரமே இயற்றியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, ராமாயணத்தில முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேபோல், சகுனி கௌரவர்களிடம் புறங்கூறி, பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணம் ! குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் உறவினர்கள் மீதே அம்பு விட மனம் கலங்கிய அர்ஜுனன், பலவிதமான சந்தேகங்களை, கீதாசார்யனான ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டான். இறையருள் பெற்றவனின் லட்சணங்கள் என்ன? என்பது அர்ஜுனனின் கேள்விகளுள் ஒன்று. அதற்கு 26 நற்குணங்களைக் கொண்டவன் இறையருள் பெற்றவனாகிறான் என, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறி, பட்டியலிடுகிறார். அவற்றில், கோள் சொல்லாதிருத்தலும் ஒன்று! ஒருவர் அருகில் இல்லாதபோது, அந்த நபரின் எதிர்மறைக் குணங்களே நினைவுக்கு வருவது, பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், மேலதிகாரிகளிடம் தங்களது அலுவலக சகாக்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உயரதிகாரியிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் ஓர் உத்தி இது என்ற நம்பிக்கை ஒரு காரணம்; தான் செய்யும் தவறுகளில் இருந்து அதிகாரியின் கவனத்தைச் திசை திருப்பும் நோக்கமும் இதில் உண்டு.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும், பிறரை விடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் சாதனமாகவும் சிலர் புறங்கூறுதலைக் கையாளுகின்றனர். இன்னும் சிலருக்கு மற்றவர்களின் ரகசியங்களை அம்பலமாக்குவதில் அற்ப மகிழ்ச்சி ! பிறர் துன்பப்படுவதில் மகிழ்ச்சி காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்களும் புறங்கூறுதலில் ஈடுபடுவார்கள். தங்கள் பிரச்சனயைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களிடம் உதவி நாடும்போது புறங்கூருகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து. அதேநேரம் , தீமை விளைவிப் போரைப் பற்றி உரியவர்களுக்குத் தகவல்கள் அளிப்பது. உண்மைகளை சாட்சியமாக அளிப்பது போன்றவை கோள் சொல்லுதலின் கீழ் வராது.
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
- என்பது ஆண்டாள் வாக்கு.