பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
10:07
தெய்வீகமான ஆடி : சூரியன் தெற்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் தட்சிணாயனத்தின் தொடக்க மாதமான ஆடியில், மாதம் முழுக்க தெய்வீக விழாக்கள் சிறப்பாக இருக்கும். ஆடி விருந்து என்று புதுமணத்தம்பதியருக்கு ஆடிச்சீர் அளித்து விருந்து கொடுப்பர். முதல் ஆடி, நடுஆடி, கடைசிஆடி ஆகிய மூன்று நாட்களும் விருந்துக்குரிய நாளாக உள்ளது. ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி ஆகிய நாட்கள் அம்பிகை, முருகப்பெருமானுக்கு உகந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரம். இவைதவிர, ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு, கருடபஞ்சமி, வரலட்சுமி விரதம், மகாசங்கடஹர சதுர்த்தி ஆகிய விழாக்கள் வருகின்றன. மொத்தத்தில் வழிபாட்டுக்குரிய தெய்வீக மாதம் ஆடி என்றால் மிகையில்லை.
அம்பிகைக்குரிய மாதம் : ஆடிமாதத்தை அம்பிகை மாதம் என்பர். சுவாமியும், அம்பாளுமாக வீற்றிருக்கும் கோயில்களில் முளைகொட்டுத்திருவிழா இந்த மாதம் தான் நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழா மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாகும். அம்மன் கோயிலுக்குள் இருக்கும் ஆடிவீதியில் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கும் சூட்டியுள்ளனர் முன்னோர். ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.
தட்சிணாயன விழாக்கள் : ஆடிமுதல் மார்கழி வரை ஆறு மாதம் தேவலோகத்தில் இரவுப்பொழுது. தை முதல் ஆனி வரை பகல்பொழுது. ஆடியிலிருந்து சூரியன் தன் சுற்றுப்பாதையை தெற்கு நோக்கிச் செலுத்துவதால் இக்காலத்தை தட்சிணாயனம் என்று சொல்வர். "தட்சிணாயனம் என்பதற்கு "தெற்கு நோக்கிய பயணம் என்று பொருள். இதில் ஆடியில் மாரி, காளி, பேச்சி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் சிறப்பாக நடக்கும். அம்பாளுக்குய தனிவிழாவான நவராத்திரி புரட்டாசியில் கொண்டாடப்படுகிறது. நாடு வளம் பெற மழைவளமும், நல்ல மணவாழ்வு பெற கணவன் அமையவும் கன்னிப்பெண்கள் மேற்கொள்ளும் பாவைநோன்பும் தட்சிணாயனத்தில் வரும் மார்கழியில் இடம்பெறுகிறது.
மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை அமைய... : கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். இவ்விரதமிருக்கும் பெண்களைப் பார்க்க ஆண்களை அனுமதிப்பதில்லை. மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இவ்வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச் செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மரபு. தை, மாசி செவ்வாய்க்கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.
மாங்கல்ய பலத்திற்கான விரதம் : ஆடி அல்லது ஆவணிமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளும் விரதம் வரலட்சுமி விரதம். ஸ்கந்த புராணத்தில், இவ்விரதத்தின் மகிமை பற்றி சிவபெருமான் விளக்குகிறார். இந்த ஆண்டு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட்11) இவ்விரதம் அனுசரிக்கப்படுகிறது. பூஜையறையில் பசுஞ்சாணத்தால் மெழுகி மாக்கோலமிட வேண்டும். அரிசியைப் பரப்பி பூரணகும்பம் வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். இயலாதவர்கள் லட்சுமி படம் வைத்து மலர் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நெய் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல், இனிப்புவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் நோன்புக்கயிறு கட்டுவது அவசியம். வீட்டுக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். இந்நாள் புதுநகை, புதுப்பொருட்கள் வாங்க உகந்தது.
முருகனுக்கு ஆடிக்கிருத்திகை : ஆடியில் வரும் கார்த்திகை முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. இதை "ஆடிக்கிருத்திகை என்பர். இந்நாளில் குன்றில் குடியிருக்கும் குமரப்பெருமானை வேண்டி கிரிவலம் வருதல் சிறப்பு. முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் என்றாலும், இவருக்குரிய விரதமாக கார்த்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில், இந்நாளில் முருகப்பெருமான், தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைத் தந்தருள்வார். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கார்த்திகைப்பெண்கள் சிலைவடிவில் காட்சியளிக்கின்றனர். ஆடிக்கிருத்திகை நாளில் இவர்களையும் வழிபட்டு வரலாம். இவ்வாண்டு, ஜூலை25ல் ஆடிக் கிருத்திகை நிகழ்கிறது.
நகை வாங்க நல்லநாள் : தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். தண்ணீர் வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது. நீர்நிலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆடி மாதத்தில் "ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரியை பெண்ணாக பாவித்து மஞ்சள், குங்குமம், மலர்களால் பூஜிப்பர். புதுமணத்தம்பதியர் ஆற்றங்கரையில் நீராடி மாங்கல்யத்தைப் புதுகயிற்றில் கட்டிக் கொள்ளும் சடங்கு நடைபெறும். காவிரிக்கரையோரத்தில் மட்டுமில்லாமல், தீர்த்தம், ஆறு இருக்குமிடமெல்லாம் ஆடி18ல் (ஆக. 3ல்) நீராடி நதிகளை காவிரி அன்னையாக கருதி வழிபடும் வழக்கமும் உண்டு. நதி, குளக்கரைகளில் தீபம் மிதக்க விடும் வழக்கம் அந்நாளில் இருந்தது. நதித்தாயை வணங்கினால் இயற்கைச்சூழல் பாதுகாப்பும், விவசாயத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆடியில் நகை, புதுப்பொருட்கள் வாங்க நன்னாள். தொழில்களும் பெருகி வளரும் என்ற அடிப்படையில், இந்நாளில் தொழிலும் துவங்குவதுண்டு.
ஆடியில் திருக்கல்யாணம் : ராமபிரான் வழிபட்ட சிவபெருமான் அருள்புரியும் ராமேஸ்வரம் சிறந்த பாவநிவர்த்தி தலமாகத் திகழ்கிறது. சைவமும், வைணவமும் சங்கமிக்கும் இத்தலத்தில், பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாதசுவாமிக்கும் ஆடியில் திருக்கல்யாண விழா(ஆக.4) சிறப்பாக நடக்கிறது. காசியாத்திரை சென்று வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடிமாதம் முழுவதும் இங்கு தீர்த்த நீராடுதல் சிறப்பானதாகும். பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரம் திகழ்வதால், ஆடி அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.
ஆடியே வருக .... ஆனந்தம் தருக!
ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும். சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம். தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும். ஆடி மாதம் அம்மனின் மாதமாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதமும் இதுவே! ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.
ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒருமுறை உமையம்மை, சிவபெருமானை விட்டு விலகி இருந்தபோது, சிவபெருமானது தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த அசுரன் பாம்புருவில் உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான். தன்னோடு மகிழ்ந்திருக்க வந்திருப்பது அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர் ஒன்றாக இருக்கக்கூடாது என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில், ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அது கடுமையான வெயில் காலம். ஆகையால் தாய், குழந்தை இருவருக்குமே ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பியாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான் ! இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில், அனைவரையும் வணங்கி வாழ்வில் வளம் பல பெறுவோம்.
கோமதிக்கு ஆடித்தபசு : அம்பிகை தவமிருந்த அற்புத தலம் சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்கோயிலில், அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவன் அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி ஆடிபவுர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகம். ஆடித்திருவிழாவின் 12ம் நாளில் "ஆடித்தபசு என்னும் பெயரில் இவ்விழா நடைபெறும். அன்று கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார். இவ்வாண்டு ஆகஸ்ட்11ல் இவ்விழா நடக்கிறது.
ஆண்டாளின் ஆடிப்பூரம் : பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள். வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. "" ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், கழுத்துக்கு அணிகலனான மாங்கல்யம் தான் உயர்ந்த ஆபரணம். இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும். இவ்வாண்டு ஆகஸ்ட்2ல் ஆடிப்பூரம் நிகழ்கிறது.
மகா சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியும் உகந்ததாகும். இதனைச் சங்கடஹரசதுர்த்தி என்று சொல்வர். ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முன்வரும் பெரிய சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த ஆண்டு இச் சதுர்த்தி ஆடியின் கடைசி நாளான ஆக., 17ல் வருகிறது. ஆற்றல், அறிவின் அடையாளமாக விநாயகர் திகழ்வதால், இவரை "மேலான தலைவர் என்னும் பொருளில் "விநாயகர் என்று குறிப்பிடுகிறோம். செய்யும் செயல்கள் தடையின்றி நிறைவேற விநாயருக்கு உகந்த சங்கடஹரசதுர்த்தி வழிபாடு அவசியம்.