மத்தியப்பிரதேசத்தின் சிறு நகரம் கஜுராஹோ, இந்தியர்களின் மிகச் சிறந்த கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ்பெற்ற இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோவில், மத்திய கால இந்து மற்றும் சமணக் கோயில்கள் அதிக அளவில் உள்ளன. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களுள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கஜுராஹோ என்ற பெயர், கர்ஜுராவாஹகா என்ற பெயரிலிருந்து மருவியாகும். இது சம்ஸ்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதற்குப் பேரீச்சம்பழம் என்று பொருள்.
ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதிற் சுவரால் சூழப்பட்டது. ஒவ்வொரு வாயிலையும் இரு தங்க பேரீச்ச மரங்கள் அலங்கரிக்கின்றன. கஜுராஹோ கோயில்கள் 950-ம் ஆண்டு முதல் 1150-ம் ஆண்டு வரையிலான 200 ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்டவை சான்டெலா முடியரசர்கள் இவற்றைக் கட்டினார்கள். இங்கு முன்பு 80 இந்துக் கோயில்களுக்கு மேல் இருந்தன. இப்போது 25 கோயில்கள் மட்டுமே ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை சுமார் 20 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளன. இக்கோயில்கள் மணற்பாறைகளால் ஆனவை. கலையம்சம் நிரம்பிய நுணுக்கமான சிருங்கார சிற்பங்கள் இந்தக் கோயில்களில் காணப்படுகின்றன. மனிதர்களால் இத்தனை நுணுக்கமாக வடிக்கமுடியுமா என்கிற பிரமிப்பை இந்தச் சிற்பங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்த ஸ்தலத்திலுள்ள கோயில்கள் மேற்கு கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி கோயில்கள் என மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்குத் தொகுதியில் முழுக்க முழுக்க இந்து தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில், கண்டரிய மஹாதேவா கோயில் மிகப் பெரிய கம்பீரமான கோயிலாகும். கஜுராஹோ கிழக்குத்தொகுதி கோயில்களில் இந்துக் கோயில்களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன.