பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
10:04
துர்முகி ஆண்டின் ராஜா சுக்கிரன். இவருக்குரிய தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். இந்த ஆண்டில் நற்பலன் பெறும் ராசியினராயினும் சரி...உங்கள் சொந்த ஜாதகத்திலுள்ள லக்னத்தின் அடிப்படையில் சுக்கிரனால் தோஷம் ஏற்படுபவர்களாயினும் சரி... ரங்கநாதரைப் பற்றிய இந்தச் செய்திகளைப் படித்தாலே போதும். உங்கள் பொருளாதார சூழலை சரி செய்து விடுவார் சுக்கிரன். கட்டு கட்டா பணத்துடன் நிம்மதியாக வாழலாம்.
ரங்கராஜருக்கு நன்றி!
கஜேந்திரன் என்னும் யானையை காத்த விஷ்ணுவின் வரலாறு ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் என்னும் ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வைகுண்டத்தில் விஷ்ணுவும், மகாலட்சுமியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தோற்றுப் போனவர் எழுந்து ஓடக்கூடாது என்பது நிபந்தனை. அதன்படி விஷ்ணுவின் அங்கவஸ்திர நுனியும், லட்சுமியின் முந்தானையும் முடிச்சிடப்பட்டது. அந்த சமயத்தில் தான், முதலையிடம் சிக்கிய யானை கூக்குரலிட்ட சப்தம் விஷ்ணுவின் காதில் விழுந்தது. கணப்பொழுதும் தாமதிக்காமல் விஷ்ணு கருட வாகனத்தில் யானையைக் காக்கப் புறப்பட்டார். முந்தானை முடியப்பட்டு இருந்ததால் மகாலட்சுமியும் பெருமாளோடு உடன் வந்தாள். ரங்கராஜ ஸ்தவத்தில் பராசர பட்டர்,ஹே! ரங்கராஜரே! அந்த யானையை காப்பாற்றியதற்காக மட்டும் நான் உன்னை வணங்கவில்லை. கணப்பொழுதும் தாமதிக்காமல் லட்சுமியோடு வந்தாயே! அந்த வேகத்தை எண்ணியே கை கூப்பி அஞ்சலி செய்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். பார்த்தீர்களா! ரங்கநாதனை நம் கஷ்டம் தீர உளமாற வணங்கினாலே போதும். அவர் லட்சுமியோடு வருவார். அவளது பார்வை பட்டால் இப்பிறவிக்கு மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் கோடி கோடியாய் பொருள் சேரும்.
நினைத்தாலே இன்பம்!
கடவுளின் பெயர்கள் அமிர்தம் போல இனிமை மிக்கவை என்கிறது கருட புராணம். இந்த பெயர்கள் பயணம் செய்யும் மனிதனுக்கு மூடை போல உதவுகின்றன. மூடை என்றால் தலைச் சுமை அல்ல. அந்தக் காலத்தில் வெளியூர் செல்பவர்கள் புளியோதரை, தயிர்சாதம் போன்றவற்றை துணியில் கட்டி தோளில் சுமந்து செல்வர். வழியிலுள்ள ஆறு, குளக்கரைகளில் அமர்ந்து கட்டுச் சாத மூடையைப் பிரித்து சாப்பிடுவர். வாழ்வும் ஒரு பயணம் போலத் தான். அதில் கட்டுச்சாத மூடை போல கடவுளின் திருநாமம்(பெயர்) மனிதனுக்கு உதவுகிறது. ரங்கநாதா, கோவிந்தா, கோபாலா என்று வாய்விட்டுச் சொல்லக் கூடத் தேவையில்லை. மனதால் நினைத்தாலே சிரமம் நீங்கி இன்ப வாழ்வு உண்டாகும்.
நல்ல புத்தி கொடுப்பவர்!
ஸ்ரீரங்கத்தில், வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான எம்பார் சுவாமியின் ராமாயண சொற்பொழிவு தினமும் நடந்தது. வடக்கு சித்திரை வீதியில் வசித்த ஒருவர் மட்டும் அந்த சொற்பொழிவுக்கு வராமல், தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பொழுதைக் கழித்தார். பலரும் அந்த திண்ணைக்காரரை அழைத்தும் வர மறுத்து விட்டார். ஒருநாள் திண்ணைக்காரர் ராமாயணம் கேட்க திடீரென வந்தார். அவரது திடீர் வரவு பற்றி அறிய பலருக்கும் ஆசை ஏற்பட்டது. அப்போது எம்பார்,ஒருவர் கோவிலுக்கு வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் அவரவர் மனநிலையே காரணம் என்று தவறாக எண்ணுகிறீர்கள். இத்தனை நாளும் உபன்யாசம் கேட்க வராதவர் இன்று வருவதற்கு காரணம் எம்பெருமான் ரங்கனே. அவனே மனதிற்குள் இருந்து நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறான், என்றார். உலகில் நடக்கும் அனைத்து செயலுக்கும் மூல காரணமாக இருப்பவர் அந்த ரங்கநாதனே.
அங்கேயும் இவர் போல...!
ஸ்ரீரங்கத்தில் வசித்த சொட்டை நம்பி என்ற அடியவரின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த அவரிடம் சீடர் ஒருவர், சுவாமி! தங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? என்றார். அதற்கு சொட்டை நம்பி, ரங்கநாதரின் அருளால் எனக்கு நல்ல குருநாதரின் சம்பந்தம் கிடைத்தது. மீண்டும் பூமிக்குத் திரும்பி வராத மோட்ச கதிக்கு செல்வேன் என்ற தெளிவும் இருக்கிறது. இருந்தாலும் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாள், இங்கிருக்கும் ரங்கநாதரைப் போல் இருந்தால் தான், அங்கு இருப்பேன். இல்லாவிட்டால் ஸ்ரீரங்கத்திற்கே மீண்டும் வந்து விடுவேன், என்று பதில் அளித்தார். அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கூறியதை சொட்டைநம்பியின் கடைசி நேர எண்ணம் தெரியப்படுத்துகிறது.