பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
01:04
துர்முகி தமிழ்ப்புத்தாண்டு வியாழக்கிழமை பிறக்கிறது. துர்முகி என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. துர்முகி என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முக என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஹயக்ரீவர்.
ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான். இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால்,ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு துர்முகி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
கேரளாவில் சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.