பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
04:04
எல்லா மாதத்திலுமே பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் வரும் பவுர்ணமியே மிகவும் கீர்த்தி பெற்றதாக விளங்குகிறது. காரணம், இந்தப் பவுர்ணமியில்தான் சந்திரன் தனது 64 கிரணங்களையும் முழுமையாகக் கொண்டு பட்டொளி வீசிப் பிரகாசிக்கிறார். இதைத்தவிர பல சிறப்புகளும் உண்டு. அதில் மிக மிக முக்கியமானது சித்திர குப்தர் தோன்றிய தினம் சித்திரா பவுர்ணமி என்பதே. அவரை நினைத்து அன்று விரதம் இருப்பதை சித்திர புத்திரனார் விரதம் என்றே சிறப்பித்துக் கூறுவார்கள். சித்திர குப்தர் கதை: அஷ்டதிக்குப் பாலர்கள் என்று சொல்லப்படும் அக்னி, வாயு, யமன், வருணன், இந்திரன் போன்றோர் சிவபெருமானை துதித்து வணங்கினர். இதில் மற்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்க, யமன் மாத்திரம் சோர்வாக இருந்தார். கைலாயநாதர் காரணம் கேட்க, ஐயனே! கலியுகம் ஆரம்பித்து விட்டது.
மக்களின் பாவக்கணக்குகள் பெருகிவிட்டன. ஒவ்வொருவருடைய பாவம், புண்ணியம் இவற்றைக் கணக்கு வைத்துக்கொண்டு அவர்களுக்கு உரிய நீதியைச் சொல்ல என் ஒருவனால் முடியவில்லை. அதுவும் தவிர பிரம்மாவும் அவர்களது கணக்குகளைக் கேட்டுத்தான் அடுத்த ஜன்மத்தில் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார். இத்தனை வேலைகளையும் என்னால் சரி வர நிறைவேற்றாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு தாங்கள்தான் ஒரு வழி செய்து அருளவேண்டும் என்று வேண்டினார். உடனே சிவபெருமானும், காலம் வரும் போது அருள்வோம் என்று கூறினார்.
யமனுக்கு அருள வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த உமையொருபாகன், தங்கத்தட்டில் அழகான சித்திரம் ஒன்று வரைந்தார். அன்னை சக்தி அதில் மூச்சுக் காற்றை ஊத, அது அழகான குழந்தையாக மாறியது. குழந்தாய்! நீ பூவுலகில் இருக்கும் மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலைக்காக அவதாரம் செய்தவன். நீ யமனின் உதவியாளனாக இருக்க வேண்டும். அதுவே உன் பணி என்று கூறினார். அவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியவரே சித்திரபுத்தன் எனும் சித்திரகுப்தன் எனப் புராணக்கதை ஒன்று சொல்கிறது.
மற்றோர் கதையின்படி, இந்திரனும் இந்திராணியும் தங்களுக்கு மக்கட்பேறு வேண்டும் என்று ஒருசமயம் வேண்டி தவமியற்றினார்கள். தவம் செய்துகொண்டிருந்த இந்திரன் - இந்திராணிக்கு முன்னால் தோன்றிய விரிசடைக்கடவுள், இந்திரா! நீ அதிகாலையில் ஒரு மலராக மாறு! உன் மனைவி இந்திராணி ஏடும் எழுத்தாணியுமாக மாறட்டும். நீங்கள் இந்த சுனை நீரில் கலந்துவிடுங்கள். உங்களை காமதேனு தன் வயிற்றில் வைத்துக் கொள்ளும். வயிற்றில் சில நாழிகை இருந்த பின்னர் நீங்கள் வெளியில் வரலாம். சரியாக பத்தாவது மாதம் காமதேனு உங்களுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுக்கும் என்று அருளினார்.
தேவர் தலைவனும் தலைவியும் அவ்வாறே செய்தனர். சிவபிரான் சொன்னது போலவே காமதேனு அழகே உருவான ஆண்குழந்தையை ஈன்றது. குழந்தை கையில் ஓர் ஏடும், எழுத்தாணியும் இருந்தன. சித்திரா பவுர்ணமி நாள் ஒன்றில் அவர் அவதரித்ததால், சித்திரை புத்திரன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர். சில காலம் சென்றதும் சித்திரை புத்திரர் தனது ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு யமனைக் காணச் சென்றார். யமனுலகு சென்று தான் யார் என்பதையும் தனக்கு சிவபெருமான் இட்ட கட்டளையையும் தெரிவித்தார். ஆனால் யமனுக்கு சற்றே சந்தேகமாக இருந்தது. நீயோ பார்க்க மிகவும் இளையவனாகத் தோன்றுகிறாய்! உனது கையிலிருக்கும் ஏடும் மிகவும் சிறியது.
ஆனால் பூவுலகத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம். இந்த சிறிய ஏட்டில் எப்படி நீ அத்தனை பேரின் கணக்கையும் எழுதுவாய் என்றார். அதற்கு சித்திரை புத்திரர், ஐயா! இந்த ஏடு எனக்கு ஈசனால் வழங்கப்பட்டது. எவ்வளவு எழுதினாலும் தீர்ந்தே போகாது! ஆகையால் நீங்கள் என்னை நம்பலாம் என்றார். யமனும் உடனே அவரை தனது உதவியாளராக பாவ, புண்ணிய கணக்கு எழுதுபவராக நியமித்துக்கொண்டார்.
காலங்கள் சென்றன. மக்களின் பாவங்கள், அதற்கான தண்டனைகள், இன்ன புண்ணியம் செய்தால் இன்ன பலன் கிட்டும் என்று துல்லியமாக எழுதி வைத்தார் சித்திரபுத்திரர். ஆனால் மக்களின் கணக்குளை ரகசியமாக வைத்திருந்ததால் சித்திர குப்தர் என்று அழைக்கப்பட்டார். குப்த என்றால் ரகசியமான என்று அர்த்தம். சிறு தவறு கூட வராமல் தனது கடமையைச் செய்தார் சித்திர குப்தர். நான்முகனும், நாராயணனும்கூட அவரைப் பாராட்டினர். சிவபெருமான் தோன்றி, மகனே சித்திர குப்தா என் மனம் நிறைந்திருக்கிறது! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்றார். நெடு நாட்களாக தனது மனதில் இருந்த ஆசையை வெளியிட்டார் யமனின் உதவியாளர். ஐயனே! மக்களுக்கு நல்வழி காட்ட எனக்கு அனுமதி அளிக்கவேண்டும். மக்கள் அறியாமல் செய்த பாவங்கள் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதோடு அதனைக் குறைக்கும் சக்தியையும் எனக்கு அருளவேண்டும் என்று பிரார்த்தித்தார்.
மக்கள் நலத்தில் அவருக்கு இருந்த அக்கறை எம்பெருமானின் மனதைக் கவர்ந்தது. மகனே! சித்திர குப்தா உனது கதையைப் படிப்பவர்கள் அறியாமல் செய்த பாவங்கள் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற உண்மையையும் சேர்த்தே படிப்பார்கள். அதோடு நீ அவதரித்த நாளான சித்திரா பவுர்ணமியின் போது உன்னை நினைத்து பூஜை செய்து விரதம் இருப்பவர்களது பாவங்களைக் குறைக்கவும், புண்ணியங்களைக் கூட்டவும் உனக்கு வல்லமை அளிக்கிறேன். ஆண்டின் முதல் பவுர்ணமியான சித்திரா பவுர்ணமி அன்று உன்னை ஆராதித்து முறையாக பூஜை செய்து உன் கதையைப் படிப்பவர்களுக்கு நீ நலமே செய்வாயாக அவர்களுக்கு மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும் என்று கூறி மறைந்தார். அன்று முதல் சித்திர குப்தர் நோன்பு எனும் விரதம், சித்திரா பவுர்ணமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது.
பூஜை செய்யும் முறை: சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதாலும், மறைந்தே இருப்பவர் என்பதாலும் இவரை உருவமாக வழிபடும் பழக்கம் இல்லை. கலசம் வைத்தோ அல்லது விநாயகர் படத்தை வைத்தோ இவருக்கான பூஜையைச் செய்யலாம். விநாயகர் படத்துக்கு மலர்களை அணிவித்து மஞ்சளிலும் பிள்ளையார் பிடித்து வைக்கவேண்டும். ஏடு, எழுத்தாணி அதாவது எழுதாத ஒரு நோட்டுப்புத்தகம், ஒரு பேனா கண்டிப்பாக வைக்கவேண்டும். உடைத்த தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கனி வகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் பூஜைக்காக வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கலை நிவேதனமாகச் செய்துகொள்ள வேண்டும். சில துதிகளைச் சொல்லியும் விநாயகர் துதிகளைச் சொல்லியும் பூஜை செய்யவேண்டும். இறுதியாக, நான் செய்த மலையளவு பாவங்களை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும், எழுதிக்கொள்ள வேண்டும். சித்திர குப்தரே! என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும், அன்று நாம் செய்யும் தான, தர்மத்துக்கு மலையளவு பலன் உண்டு என்பதால் நிவேதித்த பிரசாதத்தை கொஞ்சம் நாம் எடுத்துக்கொண்டு அதனை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவேண்டும், அன்று முழுவதும் உப்பு, பால், தயிர், நெய் ஆகிய பொருட்கள் சேர்த்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மற்றவற்றை உண்ணலாம். இவ்வாறு பூஜை செய்து விரதமிருந்தால் மறுபிறப்பு, நோய் நொடிகள் ஆகியவை நமக்கு நேராது என்று புராணங்கள் கூறுகின்றன.
மேலும் சித்திர குப்த விரதம் அனுஷ்டித்தால் ஆயுள் கூடும். இதனை ஜோதிட சாஸ்திரம் அழகாக விளக்குகிறது. ஆயுள்காரகன் சனி என்று சொல்லப்பட்டாலும், அவரது மகனான குளிகன் என்பவரே மனிதனின் வாழ்நாளை நிர்ணயிக்கிறார். அவரது நிலையை வைத்தேதான் ஜோதிடர்கள் ஒருவரது ஆயுளைக் கணிக்கிறார்கள். சித்திர குப்தரை வழிபட்டால் குளிகனது தோஷம் முற்றிலுமாக நீங்கிவிடும். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள்கூட சித்திரகுப்த விரதத்தை அனுசரித்தால் வியாதி நீங்கி, நீண்ட ஆயுளைப் பெறமுடியும். சித்திரா பவுர்ணமி அன்று அனைவரும் சித்திர குப்தரை நினைத்து வணங்கி, பாவமே செய்யாமல் இருக்கும் உறுதி மொழியை எடுத்துக்கொள்வோம். அதோடு சித்திரகுப்தர் நோன்பை அனுசரித்து, இத்தனை நாள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தைப் போக்கி அருளவேண்டும் என்று பிரார்த்திப்போம். அவரது அருளால் நீண்ட ஆயுளும், பிறவா நிலையும், மோட்சமும் கிடைக்கப் பெறுவோம்.
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் லேகணீ
பத்த தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் சர்வ தேஹினாம்.