ராமர், சீதா தேவி ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி நைவேத்யம் செய்த பிறகு சாப்பிடுவது ஸத்யபோதரின் வழக்கம். இவர் வாழ்ந்த காலத்தில் பாரதம் கடும் சோதனைக்கு உள்ளாகியிருந்தது. துருக்கியர்கள் கோயில்களைத் தகர்த்தனர். அந்நியரின் கைக்கூலியான சிலர் பிரசாதத்தில் விஷத்தைக் கலந்து விட்டனர். நிவேதன நஞ்சை ஸ்ரீரகுராமன் ஏற்றார். ராம விக்ரஹத்தில் கருமை ஏறிக்கொண்டே போவதைக் கண்டு பதறினார் தீர்த்தர்.
ஸ்வாமி உண்டதை நானும் உண்பேன் என்று சீடர்கள் தடுத்தும் சாப்பிட்டார் ஸத்யபோதர். என்ன ஆச்சரியம்! ஸ்ரீராம விக்ரஹம் கருமை அகன்று பளபளவென மின்னியது. ஆனால், ஸத்யபோதர் வயிற்று வலியால் துடித்தார். மருத்துவர் விஷத்தை முறிக்க மருந்து கொடுத்தார். பதினைந்து தினங்கள் நேரத்துக்கு தீர்த்தருக்கு மருந்து கொடுக்க வேண்டும். அந்த நாட்களில் அவர் இரவிலும் உறங்கக்கூடாது. தூங்கினால் மருந்து முறிந்துவிடும் என எச்சரித்தார். பதினைந்து நாட்கள் உத்திராதி மடத்தில் பூஜை, ஹோமம், பஜனை, கதாகாலட்சேபம் என அமர்க்களப்பட்டது. ஓர் இரவு ஸத்யபோதர் ஆராதனை முடிந்ததும் சூரியன் பிரத்யட்சமானார். ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் என்று க்ஷேத்ராடனம் மேற்கொண்டார். மஹான் சிறிது சிறிதாக குணமடைந்தார்.
திருச்சியில் அப்போது மராட்டியர்களுக்கும், நவாபுக்கும் கடும் போர் நடந்தது. திருச்சி அதிகாரியாக இருந்தவர் முராரிராவ்கோர் படே. பலமுறை நவாப் முயன்றும் முராரிராவை ஜெயிக்க முடியவில்லை. ஆற்காடு நவாபிடம் பணிபுரிந்த ராமயைõ என்ற கருங்காலி ஸத்யபோதரிடம் உள்ள தங்க, வெள்ளி அணிகலன்களைக் கொள்ளையடிக்க ஆலோசனை கூறினான். இதை அறிந்த தீர்த்தர் பிரதிமைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டார். ஆயினும், ஸத்யபோதரைக் கைது செய்து உத்திராதி மடத்தின் உடைமைகளைக் கைப்பற்றினர் நவாபின் ஆட்கள். உண்ணாவிரதம் இருந்தார் தீர்த்தர். நீரும் அருந்தவில்லை. நவாபின் சிப்பாய்கள் எந்த நோயுமின்றி திடீர் திடீரென மடிந்தனர். ராமையாவுக்கு கடும் வாந்தி பேதி. நவாப் ஸத்யபோதரைத் தேடி வந்து பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரியதோடு கொள்ளையடித்த பொருட்களையும் ஒப்படைத்தான்.
ஒரு சமயம் ஸத்யபோதர் நரசிம்மாவதார உபன்யாசம் செய்கையில் அவர் சாய்ந்து அமர்ந்திருந்த தூண் கிடுகிடு வென ஆடியது. அடுத்த விநாடி பெரும் ஓசையோடு தூண் பிளக்க நரசிம்மர் வெளிப்பட்டார். உடனே கற்பூர ஹாரத்தி காண்பித்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தார். ஜகந்நாத தாஸர் இவர் காலத்தவர் ஹரி கதாம் ருதஸாரம் என்ற அற்புத நூலை எழுதி ஸத்யபோதரின் திருப்பாதங்களில் வைத்து வணங்கினார். தாஸரே! குருதட்சிணை எங்கே? என்று தீர்த்தர் வேடிக்கையாய் வினவ, தனது பிக்ஷா பாத்திரத்தை சமர்ப்பித்தார் தாஸர். ஸத்யபோதர் தனது பாதுகைகளையும், துளசி மாலையையும் தந்து அவரை ஆசீர்வதித்தார். அவற்றை ராய்ச்சூருக்கு அருகிலுள்ள மான்வி என்ற ஸ்தலத்தில் ஜகந்நாத தாஸரின் பூர்வீக இல்லத்தில் இன்றும் காணலாம். அஹோபிலத்திலும் ஸத்ய போதருக்கு லக்ஷ்மி நரசிம்மர் தரிசனம் தந்திருக்கிறார். 8.3.1784 அன்று காவனூர் க்ஷேத்ரத்தில் பிருந்தாவனஸ்தரானார் ஸத்யபோத தீர்த்தர்.