பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
02:06
சிவன் - பார்வதி திருமணம் குறித்து புராணங்களில் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. தட்சனின் மகள் சிவபெருமானின் மனைவியாக இருந்த போதுதான், மருமகனை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தினான். தந்தையிடம் நீதி கேட்கச் சென்ற தேவியை தட்சன் அவமானப்படுத்தவே யாகத்தீயில் விழுந்து உயிர்விட்டாள். இதையறிந்து சிவபெருமான் பெருஞ்சினம் கொள்ள அவரிடமிருந்து தோன்றிய வீரபத்திரர் யாகத்தை அழித்து தட்சனையும் யாகத்தில் கலந்துகொண்டவர்களையும் தண்டித்தார்.
சிவபெருமான் யாகத்தீயில் உயிர்விட்ட சதிதேவியின் உடலை சுமந்துகொண்டு உக்ர நடனமாட, பிரபஞ்சமே அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது திருமால் தனது சக்ராயுதத்தால் தேவியின் உடல் பாகங்களை அறுத்து பூமியில் வீழ்த்தினார். அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.
அதன் பின்னர் சதிதேவி மலையரசன் இமவானின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். சிவனையே மணாளனாக அடையும் பொருட்டு கடுந்தவம் செய்ய, இறுதியில் அவள் எண்ணம் ஈடேறியது. பிரம்மா புரோகிதர் பணி செய்ய, திருமால் பார்வதி தேவிக்கு அண்ணன் ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நடத்திவைத்தார். தேவர்களும், முனிவர்களும் சித்தர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அந்த திருமணம் நடந்த இடமாக த்ரியுகி நாராயணன் கோயில் குறிப்பிடப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது சீமாந்தகாம் என்னுமிடம். பனிபடர்ந்த மலைகள் சூழ்ந்த மிக அழகிய பகுதி, இங்க மந்தாகினி, சோன், கங்கை நதிகள் சேரும் சங்கமப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கே பிரதான தெய்வமாக மகாவிஷ்ணு விளங்குகிறார்.
திரேதாயுகத்தில் கட்டப்பட்ட கோயில் இதுவென்கிறது தல புராணம். பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இதற்குப் பின்னரே அமைக்கப்பட்டவை என்கிறார்கள். இக்கோயிலில் தீக்குண்டம் போன்ற அமைப்பில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. சிவனும் பார்வதியும் திருமணத்தின்போது வலம்வந்தது இந்த நெருப்பைத் தான். அப்போதிருந்து இன்றுவரை பலரும் இங்குவந்து திருமணம் செய்துகொண்டு இந்த நெருப்பை சுற்றிவருகிறார்கள். அந்த அக்னி குண்ட சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த தம்பதியர் மகிழ்ச்சியான மணவாழ்வு நடத்துகிறார்கள் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கவுரி குண்ட் என்னும் இடம் உள்ளது. பார்வதி தவம்செய்த இடமிது கேதார்நாத் செல்லும் வழியிலுள்ள குப்தகாசிதான் சிவ-பார்வதி திருமணப்பேச்சு நடந்த இடம்.
நாராயணர் கோயிலுக்கு அருகே பிரம்மசீலா என்னும் பகுதி உள்ளது. இங்கு ருத்ர குண்ட், விஷ்ணு குண்ட், பிரம்ம குண்ட் என்னும் மூன்று குளங்கள் உள்ளன. இவற்றில்தான் சிவ-பார்வதி திருமணத்துக்கு வந்தவர்கள் நீராடினார்கள். இந்த மூன்றுக்கும் சரஸ்வதி குளத்திலிருந்து நீர் வருகிறது. இது மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டது என்பர் மழலைச் செல்வம் வேண்டுவோர் இக்குளங்களில் நீராடி வழிபடுகின்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,980 மீட்டர் உயரத்திலுள்ளது இப்பகுதி. ரயில் மற்றும் விமான நிலையங்கள் டேராடூனில் உள்ளன. அங்கிருந்து 251 கிலோமீட்டர் பயணித்தால் சோன் பிரயாக் என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும். அல்லது வேறு பாதையில் மேலும் ஐந்து கிலோ மீட்டர் வாகனத்தில் சென்று, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்லலாம். சென்னையிலிருந்து டேராடூன் 2,396 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் பயண நேரம் 37 மணி.