செல்வம் என்றால் பணம், பொருள், சொத்து, சுகபோகம், குழந்தை குட்டிகள் என்றே நினைக்கிறோம். நாம் குறிப்பிடும் இந்த செல்வம் நிலையானதல்ல. ஒருநாள் நம்மை விட்டு நீங்கி விடும். நிலையான செல்வம் இறைவன் மட்டுமே. மாணிக்கவாசகர்திருவாசகத்தில் பிடித்த பத்து என்னும் தலைப்பில் சிவபெருமானே உண்மையான செல்வம் என்றும், அதை தான் சிக்கு (தலைமுடியில் உண்டாவது) போல கெட்டியாகப் பிடித்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே என்பதே அந்த வரி. இந்த நிஜமான பக்தியை ஏற்ற சிவபெருமான், ஒரு கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்தும், பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டும்,நரியைப் பரியாக்கியும் திருவிளையாடல் நிகழ்த்தி மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார்.