யார் யார் வீட்டில் சாப்பிடலாம் என்று கேட்டால், அதற்கு கிருஷ்ணரிடம் பதில் இருக்கிறது. ஒருமுறை கிருஷ்ணர் அஸ்தினாபுரம் வந்தார். துரியோதனனின் சித்தப்பாவான விதுரர் வீட்டில் சாப்பிட்டார். அவர் கிருஷ்ணரின் பரம பக்தர். மகாத்மா என்று அவரை மக்கள் போற்றுவார்கள். இதையறிந்த துரியோதனன் கொதித்தான். “என் போன்ற பணக்காரர்கள் வீட்டில் சாப்பிடாமல், ஒரு ஏழை வீட்டில் சாப்பிட்டாயே. இதிலிருந்தே உன் அல்ப புத்தி தெரிகிறது, என்று திட்டினான். கிருஷ்ணர் சிரித்தபடியே,“துரியோதனா! சுத்தம் பாகவதான்னம் என்பது உனக்கு தெரியாதா! பக்தர்கள் எனக்களிக்கும் உணவே சிறந்தது. நீயும் எனக்கு நேரிடையான எதிரியல்ல. ஆனால், என்னை உயிர் மூச்சாகக் கொண்ட பாண்டவர்களுக்கு விரோதி. என் பக்தர்களின் விரோதி எனக்கும் விரோதி. அதனால் உன் வீட்டில் சாப்பிடவில்லை, என்றார். இதிலிருந்து கடவுளை துவேஷிப்பவர்களின் வீடு, நம் எதிரிகளின் வீடு, நமக்கு வேண்டியவர்களுக்கு எதிரிகளாக உள்ளவர்களின் வீடுகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நம் மேல் நிஜமான அன்பு கொண்டவர்களின் வீட்டில் மட்டுமே சாப்பிடலாம்.