கிருஷ்ணரை நினைப்பதை விட அவரது பக்தர்களை நினைப்பது எல்லா நன்மைகளையும் தரும். அதிலும் அம்பரீஷன் என்ற பக்தனை, வாழ்க்கையில் ஒருமுறை நினைத்தால் போதும்... அவருக்கு வாழ்நாள் முழுக்க சோற்றுக்கு பஞ்சமில்லை. ஏதோ ஒரு வழியில் சாப்பாடு கிடைத்து விடும். ஒரு காலத்தில், அம்பரீஷன் ஏழு கடல், ஏழு தீவுகள் கொண்ட பகுதியை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தை நாபாகன். தாத்தா நபகன். இவன் ராஜாவாக இருந்தாலும் தனக்கென எதையும் செய்ய மாட்டான். ஒரு அஸ்வமேத யாகம் நடத்துவதே சிரமம். ஆனால், இவன் நுõறு அஸ்வமேத யாகம் நடத்தினான். ஆனால் அதன் பலன் அனைத்தையும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம் செய்து விட்டான். இதனால் ஏகமாக மகிழ்ந்து போன கிருஷ்ணர், அவனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்ற விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு, தன் கையில் இருந்த சக்கரத்தையே பரிசாகக் கொடுத்து விட்டர் என்றால் பாருங்களேன்! அம்பரீஷனின் பெயர் வேதத்திலேயே இருக்கிறது. இதனால் அவனை மனதார நினைப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் சாப்பாட்டுக்கு சிரமப்பட மாட்டார்கள். கோவிலுக்குப் போனால் அவர்கள் பிரசாதத்துக்காக கை நீட்ட வேண்டாம். பிரசாதம் அவர்களைத் தேடி வரும்.