பதிவு செய்த நாள்
03
நவ
2016
01:11
மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர் கண்ட சிறந்த நெறிகளே விரதங்கள் எனப்படும். பரமனிடத்தில் பக்தி பூண்டு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள விரதங்களைப் போல் ஒருவனுக்கு வேறு எதுவும் துணை புரிவதில்லை. வரிக்கப்படுவது விரதம், உடலளவு விரதம், காப்பது விரதம் என்ற ஆன்றோர் வாக்குகளைச் சிந்தித்தல் வேண்டும். புலன்களை வெல்லுதலே ஆன்மாவின் வெற்றிக்கு உற்ற துணையாகும் என்பது பெரியோர் கண்ட வழி.
தமிழகத்தில் முருக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதன்மையானது. பரவலானது, பிரபலமானது. அதைப்போல கந்த விரதங்களும் காலங்காலமாக முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. கந்தவேளை நினைக்கும்போது மூன்றுவித விரதங்கள் நம் சிந்தனைக்கு வருகின்றன.
1. கந்தனைப் பெற விரதம் இருந்தோர். 2. கந்தன் மேற்கொண்ட விரதம். 3. கந்தனை அடைய நாம் மேற்கொள்ளும் விரதங்கள் என்பனவாகும். கந்தன் அவதாரத்திற்காக வானவர் தவம் இருந்தனர். முருகவேள் தமது பெற்றோரை வழிபடும் விரதம் உடையவர். வேளூர் என வரும் தலங்கள் அனைத்தும் கந்தன் சிவபெருமானை வழிபட்டவையாகும்.
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் 1. வாரவிரதம் - இது வெள்ளிக்கிழமை விரதம். 2. நாள் விரதம் - இது கார்த்திகை நட்சத்திரத்தன்று மேற்கொள்ளும் கிருத்திகை விரதம். 3. பட்ச விரதம் - இது சஷ்டி (திதி) விரதம். கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாதத்து சுக்கிலபட்ச (வளர்பிறை) சஷ்டி முதல், ஓராண்டில் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழியும் இதனால் எழுந்ததே. சஷ்டி விரதம் இருந்தால் நற்புத்திரப் பேறு கிடைக்கும். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிகொள்வான் என்னும் பொருள் கொள்ளல் அதனினும் சிறப்புடையதாகும். இதயக் குகையில் வீற்றிருப்பவன்தானே குகன்!
கந்தசஷ்டி நன்னாளுக்கு முன்வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து, இவ்விரதத்தை அனுஷ்டிப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள், அந்நாட்களில் ஒரு நாளைக்கு ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். இவ்விரத நாட்களில் விடியற்காலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறு அணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் ஸ்தம்பத்திலும், பிம்பத்திலும் கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யிற் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்து, கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
பிருஹத்சம்ஹிதை என்னும் நூலில், ஆறாம் நாள் ஆறுமுகனான ஸ்கந்தனுக்கு உரியது என்று வராஹமிகிரர் குறிப்பிடுகிறார். எனவே இந்த ஆறாம் நாளன்று பெரும்பாலும் கந்தனை வேண்டி விரதம் இருப்பது என்னும் வழக்கம் வட இந்தியாவிலும் பிரபலமானதாகும். சாதுர்வர்க்க சிந்தாமணி என்னும் நூலில் விரத காண்டம் என்ற பகுதியில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சைத்ரம் (பங்குனி - சித்திரை) மாதத்தில், குமார சஷ்டி விரதம் இருப்பவர்கள் நோய் நொடியிலிருந்து விடுபடுவர் என்று குறிப்பிடப்படுகிறது. மகப்பேறு வேண்டி வைசாக (சித்திரை -வைகாசி) மாதத்தில், சஷ்டி திதியன்று தொடங்கப்படும் புத்ர பிராப்தி விரதம் ஓராண்டு அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆரண்ய சஷ்டி எனப்படும் விரதத்தை, குழந்தைகள் உடல் நலம் வேண்டி ஜியேஷ்டா (வைகாசி - ஆனி) மாதத்தில் சஷ்டி நாளில் மேற்கொள்வார்கள். கவுஸ்துபா ஸ்மிருதி மற்றும் புருஷார்த்த சிந்தாமணி என்னும் நூல்களில் ஸ்கந்த விரதம் என்னும் ஸ்கந்த சஷ்டி விரதம் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஆஷாட (ஆனி - ஆடி) மாதம் வளர்பிறை சஷ்டியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சிரவண (ஆடி - ஆவணி) மாதத்தில் சுக்ல பக்ஷ சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம், குஹஸ்ய பவித்ரோபணம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரிசா என்னும் தற்போதைய ஒடிசா மாநிலத்தில் பல பகுதிகளில் முற்காலத்தில் திருமணம் ஆகாத பெண்கள் கன்யாமாதம் (புரட்டாசி - ஐப்பசி) தங்களுக்கு நல்ல அழகான (முருகனைப்போல) ஆடவன் கணவனாக வர வேண்டும் என்று வேண்டி விரதம் இருப்பர். அதாவது தசரா (நவராத்திரி) பண்டிகை முடிந்த பின்னர், ஐப்பசி மாதத்தில் வரும். குமார பவுர்ணமி தினத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ளுவர்.
குமார பவுர்ணமி அன்று மட்டுமின்றி மாதம் முழுவதும் விரதம் இருப்பதும் உண்டு. இவர்கள் முந்தைய (புரட்டாசி) மாதத்தில் வரும் பவுர்ணமியன்று விரதத்தைத் தொடங்கி குமார பவுர்ணமியன்று விரதத்தை நிறைவு செய்வர். குறிப்பாக திருமணமாகாத இளம் பெண்கள் பவுர்ணமி நிலவையே கார்த்திகேயனாக நினைத்து வழிபடுவர். இந்த வழிபாட்டில் அல்லி மலரும், லஜா எனப்படும் நெல் பொரியும் முக்கியமானவை. இதைத் தவிர அரிசி மற்றும் கோதுமையில் செய்த இனிப்புகள், பழங்கள் முதலியவையும் நிவேதிப்பர். வழிபாட்டின் நிறைவில் விரதமிருந்த பெண்கள், சந்திரனை நோக்கி தங்களது கைகளில் நெல் பொரியை ஏந்தி கைகளைக் குவித்தபடி ஏழுமுறை அர்ப்பணிப்பார்கள்.
இதைப்போல ஒரியா இனமக்கள் பிள்ளைப் பேறு வேண்டி கார்த்திகை மாதத்தில் வழிபாடு செய்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை பத்தாம் நாள் (தசமி) அன்று தொடங்கி அமாவாசையன்று நிறைவு செய்கிறார்கள். இந்த வழிபாட்டில் ஏழு நாட்களும் பிள்ளைப்பேறு வேண்டி தம்பதியர் விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு வெற்றி, செல்வச் செழிப்பு, நீண்ட ஆயுள், அரச பதவி முதலிய அனைத்தும் கிடைக்கும் என்பது வடஇந்தியர்களின் நம்பிக்கை. மிருகசீர்ஷ (கார்த்திகை - மார்கழி) மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ சஷ்டியை கார்த்திகேய சஷ்டி என்று அழைப்பர். அந்நாளில் தங்கம், வெள்ளி, மண் அல்லது மரத்தில் செய்யப்பட்ட கார்த்திகேய வடிவத்தை வைத்து வழிபடுவர்.
காம விரதம் அல்லது காம சஷ்டி என்பது பெண்களுக்கான விரதமாகும். பவுஷ (மார்கழி) மாதத்தில் வளர்பிறை ஐந்தாம் நாள் தொடங்கி ஓராண்டு இவ்விரதத்தை அனுசரிப்பர். ஆறாம் நாள் பழங்களை மட்டுமே உண்பர். ஏழாவது நாள் பாரணை செய்வர். இவ்விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கார்த்திகேயன் வடிவத்தில் விஷ்ணுவை வழிபடுதலாகும். தங்கத்தால் ஆன கார்த்திகேய வடிவத்தை தானம் செய்வதை மிகவும் சிறப்பாகக் கருதுவர். இதனை வராக புராணம் குறிப்பிடுகிறது.
வங்காள இன மக்களிடமும் திருமணம் மற்றும் பிள்ளைப்பேறு வேண்டி கார்த்திகேயனை வழி பட்டு விரதம் இருப்பது இருந்து வந்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார்த்திகேய வழிபாடும் சஷ்டி வழிபாடும் மிக முக்கியமாக விளங்கி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. தற்போது தமிழர்கள் குடியேறியுள்ள பல வட மாநிலங்களில் ஆங்காங்கே குமரனுக்குக் கோயில் எழுப்பி சஷ்டி, கார்த்திகை முதலான விரதங்களைத் தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஷ்டி விரதம் நமக்கு மட்டுமல்ல; பாரதம் முழுமைக்கும் பொதுவான ஒன்று என்ற செய்தி கந்தவேளின் அருட்பெருமைகளை பறைசாற்றுகிறதல்லவா!