பதிவு செய்த நாள்
05
ஜன
2017
03:01
பஞ்ச பாண்டவர்களின் முன்னோர்களில் பெருமை வாய்ந்தவரான மன்னர் குருவின் நினைவாக அமைந்த இடமே, குருக்ஷேத்திரம். மன்னர் குருவிற்கு இந்திரன் ஒரு வரமளித்தான். குருக்ஷேத்திரம் புண்ணியத் தலமாக விளங்கும் என்றும், அங்கு இறப்பவர் யாராக இருப்பினும் சொர்க்கலோகம் செல்வார்கள் என்பதே அது. போருக்கான இடமாக குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தவர் பகவான் கிருஷ்ணர். இதனை எதிர்ப்பே இல்லாமல் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே, இங்கு உயிர் துறந்தால் நற்கதி நிச்சயம் என்ற நம்பிக்கையால் மட்டுமே! பகவத்கீதையின் முதல் ஸ்லோகமே, தர்மத்க்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதாயுயுத்ஸவ.. என்று தொடங்குகிறது. அதாவது, இரு குருக்ஷேத்திரத்தில் தேவையற்றகளைகளான துரியோதனனும், பிறரும் ஒழித்து அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்படும் என்பதே இதன் பொருள்.
இங்குள்ள, பீஷ்ம குண்டம், என்ற இடம், மகாபாரதப் போரில் மிக முக்கிய நினைவிடமாக போற்றப்படுகிறது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்து கிடந்தபோது, அர்ஜுனனிடம் தன் தாகத்தைத் தணிக்க கோரினார். உடனே அர்ஜுனன் பூமியை தன் அம்பினால் துளைத்து, கங்கை நீரை வரச் செய்து அவரது தாகத்தைத் தணித்தான். இந்த நீர் இன்றும் கூடவற்றவில்லை. குருக்ஷேத்திரத்தின் அருகே சுமார் ஐந்து மைல் தொலைவில் ஜ்யோதிர் நதிக்கரையில் அமைந்த ஜ்யோதிசர் நகரில்தான் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது. கீதை உபதேசிக்கப்பட்டபோது இருந்த ஆலமரம் இன்றும் அங்கே உள்ளது. இதன் வயது ஐயாயிரம் ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர்.