எல்லா மங்களங்களும் அருளும் பொருட்டு கண்டசாலா என்னும் புண்ணிய தலத்தில் ஒரே ஆவுடையாரில் வீற்றிருக்கும் ஜலதீஸ்வர சுவாமியையும், அம்பாளையும் வணங்கியவர்களுக்கு, ஈசன் எல்லா செல்வத்தையும் அளிப்பான் என்கிறது சுலோகம் ஒன்று. இறைவன் ஆணைப்படி அகத்தியர் இறைவன், இறைவியை ஏக பீடத்தில் வைத்து பூஜித்தத் தலம் இது. கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்ததால் ஜலதீஸ்வரர் ஆனார். ஒரே ஆவுடையாரில் அமைந்துள்ள அம்மையப்பனுக்கு இங்கே நடக்கும் பூஜைகளும் விசேஷமானவைதான். தினமும் காலையில் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் நடைபெறும். விபூதி அலங்காரம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். மாலையில் அம்பிகைக்கு உரியதான குங்குமத்தால் அஷ்டோத்திர, ஸகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெறும். திங்கட்கிழமைகளில் சுவாமிக்கு ஏகாதச ருத்ராபிஷேகமும், வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு, அபிஷேக அர்ச்சனைகளும், பவுர்ணமியில் ஸ்ரீசூக்த முறையில் விசேஷ பூஜைகளும் நடக்கும். ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 50 கி.மீ. -ல் உள்ள கண்டசாலா என்ற ஊருக்கு, அவனி கட்டா என்ற ஊர்வழியாகச் செல்லும் பேருந்துகள் ஏராளமாக இருக்கின்றன.