பதிவு செய்த நாள்
21
பிப்
2017
04:02
காஞ்சியில் உள்ள குமரக்கோட்டத்தில் அருள்பாலிக்கும் கந்த கடவுளை, பூஜை செய்து வந்தார், காளத்தியப்ப சிவாசாரியார்.பல காலம் குழந்தை செல்வமில்லாமல் மனம் வருந்திய அவருக்கு, ஆறுமுகன் அருளால், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது; அக்குழந்தைக்கு, கச்சியப்பர் என பெயரிட்டனர்.சிறுவயதிலிருந்தே, தமிழ் மற்றும் சமஸ்கிருத புலமையில் தலைசிறந்து விளங்கினார், கச்சியப்பர். அத்துடன், தந்தைக்கு பின், குமரக் கோட்டத்தில், கந்த கடவுளை, பூஜை செய்து வந்தார்.ஒருநாள், கச்சியப்பரின் கனவில், முருகன் காட்சியளித்து, ’வடமொழியில் உள்ள ஸ்காந்தத்திலிருந்து, நம் வரலாற்றை விளக்கும் பகுதியை, கந்தபுராணம் என்ற பெயரில் காவியமாக பாடு...’ என்று கூறி, ’திகட சக்கர...’ எனும் முதலடியும் எடுத்து கொடுத்தார்.
கனவு கலைந்து எழுந்தவர், முருகன் எடுத்துக் கொடுத்த முதலடியை கொண்டே, கந்த புராணம் எழுத துவங்கினார். ஒவ்வொரு நாளும் தான் எழுதிய பாடல்களை, ஆறுமுகன் திருவடிகளில் வைத்து, கதவுகளை திருக்காப்பிட்டு, வீடு திரும்புவார்.மறுநாள், சன்னதியை திறந்தால், சில பாடல்கள் அடிக்கப்பட்டும், சில பாடல்கள் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஆம்... கந்தக் கடவுளே, தம் திருக்கரங்களால் திருத்திய நூல், கந்த புராணம்.இவ்வாறு, 10,345 பாடல்களுடன், கந்தபுராணம் முழுமை அடைந்தது. அரங்கேற்றத்திற்கு, நாள் குறித்து, அரங்கேற்றம் துவங்கியது. ஏராளமானோர், கூடியிருந்த அவையில், கச்சியப்பர், ’திகட சக்கர...’ எனும், முதற்பாடலை கூறி, அதற்கு விரிவுரை கூற துவங்கினார்.அப்போது, அவையிலிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்து, ’ஐயா... தாங்கள் கூறியபடி, ’திகட சக்கர’ என்பதற்கு, இலக்கண விதி ஏதுமில்லை; இலக்கணம் மீறிய, இந்நூலை, எவ்வாறு ஏற்பது?’ என்றார்.
கச்சியப்பரோ, ’புலவர் பெருமானே... அது அடியேன் எழுதியதல்ல; ஆறுமுகனே அடியெடுத்து கொடுத்த சொல் அது...’ என்றார்.வாதம் செய்த புலவரோ, ’அப்படியென்றால், அந்த ஆறுமுகனே நேரில் வந்து, விளக்கம் கூறட்டும்; அதுவரை, அரங்கேற்றம் நடக்க, அனுமதிக்க மாட்டோம்...’ என்றார். அவருடன், மேலும் சிலர் சேர்ந்து கொள்ள, அரங்கேற்றம் தடைபட்டது.மனம் வருந்திய கச்சியப்பர் வழிபாட்டை முடித்து, ’வள்ளி மணாளா... வாட்டம் தீர வழிகாட்டு...’ என வேண்டி, அப்படியே தூங்கி விட்டார். அவர் கனவில் தோன்றிய கந்தபெருமான், ’கவலையை விடு; நாளை புலவன் ஒருவன் வந்து, வீரசோழியம் எனும் நூலைக் காட்டி, விளக்கம் சொல்வான். அந்நூலில், சந்திப் படலத்தில், பதினெட்டாம் செய்யுளில், ’திகட சக்கர...’ என்பதற்கான, இலக்கண விதியிருக்கும்...’ எனக் கூறி, மறைந்தார்.
மறுநாள், அரங்கேற்றம் துவங்கியதும், கந்தக் கடவுள் கூறியபடியே, அவையில் புலவர் ஒருவர் தோன்றி, வீரசோழியம் எனும் நூலை விரித்து, இலக்கண விளக்கத்தை காட்டி மறைந்தார். வாதம் செய்த புலவர், தம் அறியாமையை உணர்ந்து, கச்சியப்பரின் கால்களில் விழுந்து, ’வாதம் செய்த என்னை மன்னியுங்கள்...’ என, வேண்டினார்.கச்சியப்பரோ, ’மன்னிப்பு எதற்கு... மால்மருகனே நேரில் தோன்றி, மனக்கவலை தீர்த்து, அடியேன் எழுதிய நூலை பெருமைப்படுத்தியது, உங்களால் தானே நடந்தது...’ என்றார். அரங்கேற்றம் நன்முறையில் நடந்து முடிந்தது.பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு இது. அடியார்களின் அல்லல்களை தீர்க்க, ஆண்டவனே மனித உருவில் வந்து, நம் அல்லல்களை தீர்ப்பார்!