சூரியன், செவ்வாய்க்கு முன் செல்ல சுக்கிரன் இவர்கள் பின்னே செல்வதால் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மழை இன்றி வறண்டன. பஞ்சம் தலை விரித்தாடியது. மூவேந்தர்களும் அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அவர் ""சோம வார விரதம் இருந்து இறைவனின் அருளால் இந்திரலோகம் சென்று இந்திரனிடம் வேண்டுங்கள்! என்றார். அவ்வாறே, மூவேந்தரும் விரதம் இருந்து, இந்திரனிடம் வந்தனர். இந்திரன் தன் சிங்காதனத்தைவிடத் தாழ்ந்த மூன்று சிங்காதனத்தை மூவேந்தரும் அமரத் தந்தான். சேரனும், சோழனும் அதில் அமர்ந்தனர். உக்கிர பாண்டியன் மட்டும் தேவேந்திரன் சிங்காதனத்தில் அவனுக்குச் சமமாய் அமர்ந்தான். அதனால் கோபம் கொண்ட தேவேந்திரன் சேர சோழ நாடுகளில் மட்டும் மழை பெய்ய அருளி அவ்விருவரையும் அனுப்பி வைத்தான். பாண்டிய நாடு மழை இன்றி வாடிக் கொண்டிருந்தது.
ஒருநாள் பாண்டியன் பொதிய மலைக்காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பொதிய மலை மீது புட்கலாவருத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி எனும் நான்கு மேகங்கள் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான். அவற்றை விலங்கிட்டுச் சிறைப்பிடித்தான் பாண்டியன். இதை அறிந்த தேவேந்திரன் பெரும்படை திரட்டி வந்தான். பாண்டியனுக்கும் தேவேந்திரனுக்கும் பெரும் போர் நடந்தது. பாண்டியன் வீசிய வாளை தேவேந்திரன் வச்சிரப்படையை வீழ்த்தி முடியைக் கீழே தள்ளிச் சிதைத்தது. தோற்ற இந்திரன், "உன் நாட்டில் மழை வளம் தருகிறேன்!"" மேகங்களை விட்டு விடு! என்று முறையிட்டான். மேகங்கள் விடுதலை பெற்றன. பாண்டிய நாட்டில் மழை பெய்தது. வளம் சுரந்தது. பொலிவு நிறைந்தது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »