ஆண்டுகள் கடந்தன. மீண்டும் ஒருமுறை கிரகங்கள் தத்தம் நிலைதிரிந்தன. பிற கிரகங்கள் சூரியனை நோக்கி நின்றன. எனவே ஓராண்டு மழையே பெய்யாது என்னும் நிலை ஏற்பட்டு மதுரை மாநகர் பஞ்சத்தின் வசப்பட்டது. துன்பம் கொண்ட உக்கிரபாண்டியன் இறைவனைத் தொழுது, அழுது வேண்டினார்.
இரவில், கனவில், சித்த மூர்த்தி வடிவில் வந்த இறைவன், ""பாண்டியா! மேருமலையின் அருகில் உள்ள குகையில் ஏராளமான பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ உன் செண்டால் அடித்து, மேருவின் கர்வத்தை அடக்கி, வேண்டிய பொருட்களை எடுத்துக்கொள், குகைக்கு ""முத்திரையிட்டு மூடி விட்டு வா என்றார்.
அவ்வாறே பெரும் படையுடன் பல நாடுகளைக் கடந்து மேரு மலையை அடைந்தான் பாண்டியன். மலை அரசனை அழைத்தான். ஆனால் அவன் வரவில்லை. கோபம் கொண்டான் பாண்டியன். செண்டால் மேருவை அடித்தான். மலை அதிர்ந்தது; குலுங்கியது; ஆடியது; நொறுங்கியது; வெடித்தது.
செண்டால் அடிபட்ட பின் மேருமலைத் தெய்வம், நான்கு தலைகளும், எட்டுத் தோள்களும், ஒரு வெண் கொற்றக் குடையுமாய் வெளிவந்து, பாண்டியனை வணங்கி நின்றது. ""காமத்தின் வசப்பட்டுக் கிடந்தேன், காலம் தாழ்ந்தேன்! மன்னிப்பீர் வேண்டியது. பொருட்கள் இருந்த குகையை காட்டியது.
பாண்டியன் வேண்டிய அளவு வைரம், தங்கம் முதலான பொருட்களை எடுத்துக்கொண்டு தன் நாடு திரும்பினான். குடி மக்கட்கு வாரி வழங்கி, வறுமையை விரட்டினான். பல்லாண்டு நல்லாட்சி புரிந்து, தன் மகன் வீரபாண்டியனுக்கு முடி சூட்டிவிட்டு இறைவனின் திருவடி நிழலை அடைந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »