தைத்திங்கள் முதல் சங்கராந்தி தினம். கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். இறைவனை வணங்கிவிட்டுக் கோவிலை வலம் வரும்போது சித்தர் வழியில் அமர்ந்திருந்தார். நீ யார்? என்று கேட்டப் பாண்டியனுக்குத் தம் பெருமைகளைக் கூறினார் சித்தர். சிரித்தான் பாண்டியன். தற்பெருமை என்று கருதினான். அச்சமயம் வேளான் ஒருவன் செழித்து வளர்ந்த கரும்பு ஒன்றைக் கொண்டு வந்து மன்னரிடம் தந்து வணங்கினான். அதைப் பெற்ற அரசன் சித்தரைச் சோதிக்க விரும்பினான்.
இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானை உண்ணுமாறு செய்வீரா? என்று கேட்டான். "இதோ என்று கூறிய சித்தர் அங்கிருந்த கல்லில் செதுக்கிய யானையின் சிற்பத்தை நோக்கினார். நோக்கிய கணமே. கல் யானை அசைந்தது. பிளிறியது. துதிக்கையை நீட்டியது. அரசனிடம் இருந்த கரும்பைப் பற்றி வாயில் இட்டுச் சாறு வழிய உண்டது. சித்தர் மீண்டும் கல் யானையின் மீது கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். யானை துதிக்கையால் அரசரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பற்றி இழுத்து வாயில் போட்டுக் கொண்டது. கோபம் கொண்ட அரசரின் மெய்க்காவலர் சித்தரை அடிக்கக் கை ஓங்கினார். "நில்! என்று குரல் கொடுத்தார் சித்தர். காவலர் நின்றனர் சிலைகளாய்!
பாண்டியன் அறியாமை நீங்கியவனாய் சித்திரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினான். "வேண்டும் வரம் கேள்! என்றார் சித்தர். புத்திர பாக்கியம் வேண்டினார் மன்னர். சித்தர் அருளினார். யானையின் மீது கை வைத்தார். உடனே யானை தன் விழுங்கிய முத்து மாலையை கக்கி துதிக்கையால் பாண்டியனிடம் நீட்டியது. அவன் அதைப் பெற்றதும் யானை கற் சிலையாய் மாறிற்று. சித்தரும் மறைந்தார். இறைவனின் திருவிளையாடலை உணர்ந்தான். பின் சித்தரின் அருளால் பாண்டியனுக்கு மகன் பிறந்தான். குழந்தைக்கு "விக்கிரமன் எனப் பெயரிட்டு தக்கப் பருவத்தில் முடி சூட்டி இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »