மதுரை நகரை விக்கிரம பாண்டியன் ஆண்டு வந்தபோது, காஞ்சி நகரைச் சோழன் ஆண்டு வந்தான். சமண மதத்தைச் சார்ந்த இச்சோழன் விக்கிரமன் மீது பகை கொண்டவன். நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் துணிவற்றவன். சூழ்ச்சியால் விக்கிரமனைக் கொல்ல கருதினான். எட்டு மலைகளில் வாழ்ந்து வந்த சமண முனிவர்களுக்குத் தனித்தனியே ஓலை அனுப்பி வரவழைத்தான். எண்ணாயிரம் சமண முனிவர்கள் காஞ்சி நகர் வந்து கூடினர். அவர்களிடம் "அபிசாரயாகம் செய்து விக்கிரமனைக் கொல்லுமாறு வேண்டினான்.
சமணர்களும் அக்கொடிய யாகத்தை இயற்றினர். வேள்வித்தீயிலிருந்து மிகப்பெரிய கொடிய யானை ஒன்று வெளிப்பட்டது. "விக்கிரமப் பாண்டியனை மதுரை நகருடன் அழித்து விட்டு வா! என்று சமண முனிவர்கள் ஆணையிட்டார்கள். யானையின் வருகையை அறிந்து அஞ்சிய விக்கிரமன் சோமசுந்தரக் கடவுளைத் தஞ்சம் அடைந்தான். அப்போது "பாண்டியனே! அக்கொடிய யானையை நான் அழிக்கின்றேன்! அதற்கு முன் நகரின் அருகே - கிழக்கே - ஒரு அட்டாலை மண்டபத்தை உடனே கட்டி முடி - என்ற அசரீரி கேட்டது.
மகிழ்ந்தான் மன்னன். விரைந்து, பதினாறு தூண்களுடன் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினார். இறைவன் அழகிய வேடன் வேடத்தில் தோன்றினார். மிகப்பெரிய வில்லும், ஆற்றல் மிகுந்த "நரசிங்கக்கணை என அம்புமாய் மண்டபத்தின் மீது ஏறினார்.
யானை வந்தது; பயங்கரமாய் உலகதிரப் பிளிறியது. வில் வளைந்தது: அம்பு பாய்ந்தது: மலையே சாய்ந்தாற்போல் உலகமே வெடித்தாற் போன்ற ஓசையுடன் தரையில் வீழ்ந்து இறந்தது யானை. யானையின் கதி கண்ட சோழப்படையும் சமண முனிவரும் அஞ்சி, அலறி, சிதைந்து ஓடினர். மகிழ்ந்த பாண்டியன், இறைவனின் திருவடிகளைப் பற்றி ""இறைவா! நீர் இங்கே வீற்றிருந்து எம்மைக் காக்கவேண்டும்! என்று வேண்டினான். இறைவனும் இசைந்தான். விக்கிரம பாண்டியனுக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான். அக்குழந்தை இராஜசேகரன் என்னும் பெயரில் வளர்ந்து வரலாயிற்று.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »