பதிவு செய்த நாள்
05
டிச
2018
01:12
‘மாங்கல்யம் தந்துநா அனேன மம ஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபகே ஸ்ஜீவ சரதாம் சதம்’ அனைத்து நன்மைகளையும் அடையக்கூடிய இல்லற வாழ்கைக்கு அனுமதி அளிப்பது திருமணம். இந்த வைபவத்தில், மணமகன் மணமகளிடம் ‘பெண்ணே! நீ அனைத்துவிதமான நன்மைகளையும் உடையவள். உன் கழுத்தில் கட்டக்கூடிய இந்தத் திருமாங்கல்யம், நான் நூறாண்டுகளைக் காண்பதற்குக் காரணமாக இருப்பது’ என்று கூறி திருமாங்கலயம் கட்டுவர். நமது ஸநாதன தர்மத்தில், திருமணத்தின்போது ஆணும் பெண்ணும் சரிபாதி நிலையை அடைகிறார்கள். மற்ற மூன்று தர்மங்களான பிரம்மசர்யம். வானப்ரஸ்தம், சன்னியாஸம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய தர்மம் இல்லறம். இல்லறத்தில் நுழையும் பெண்ணை ‘ஹைதர்ம சாரிணீ எனக் குறிப்பிட்டு, ஆண்கள் செய்யும் அனைத்து நற்காரியங்களுக்கும் உறுதுணையாக இருப்பவள் என்றும், தவறுக் செய்யும்போது தகுந்தவாறு உரைத்துத் திருத்துவதைக் கடமையாகக் கொண்டவள் என்றும் போற்றுகிறது நம் ஸநாதன தர்மம்.
எனவே, சுமங்கலிப்பெண்கள் அனுதினமும் திருமாங்கல்யத்தை நோக்கி, ‘ஹே பராசக்தியே , உனது சக்தியாலேயே, இந்தக் குடும்ப வாழ்க்கையை என்னால் சிறப்புடன் செயல்படுத்த முடிகிறது. எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் என் கணவருக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அமையவேண்டும்; எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்’ என்று வணங்கி, அதில் குங்குமத்தை வைத்து பிரார்த்திப்பது, நமது முன்னோர் காலத்திலிருந்து தொன்றுதொட்டு வரும் மரபு.