பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
மூலம்: ஞான மோட்சக்காரகனான கேது, ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் எப்படி இருக்கப்போகிறது? உங்கள் ராசிநாதனின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீடு, இடம் வாங்குவதற்காக செலவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வரவு அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 6 ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டும் நோய்கள் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் இதுவரை அவர் வழங்கிய நற்பலன்களை இனி அவரால் வழங்க முடியாமல் போகலாம். முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதை அலைபாய விடாமல் எதிர்காலத்தை நினைத்து செயல்படுவதால் சங்கடங்கள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 9, 10.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30, ஜூலை 3, 7, 12
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்: அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மனதிற்கினிய மாதமாக அமையும். சுக ஸ்தானத்தில் ராகு, ஏழாம் இடத்தில் சுக்கிரன் என்ற நிலையால் மனதில் தடுமாற்றம் தோன்றும். சிலருக்கு காதல் அரும்பும் என்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குருவின் பார்வை குடும்ப நிலையைப் பாதுகாக்கும். எதிர்பார்த்த பணவரவை வழங்கும். செய்யும் தொழிலில் லாபத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகளை அடைய வைக்கும். சப்தம சூரியனால் ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். எந்த ஒன்றிலும் குழப்பத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டால் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் இதுவரையில் எளிதாக நிறைவேறிவந்த முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி 6ல் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை மனநிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழில் விருத்தியாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
சந்திராஷ்டமம்: ஜூலை 10, 11
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30, ஜூலை 3, 6, 12, 15
பரிகாரம்: வராகியம்மனை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: ஆத்மகாரகனான சூரியன், புத்திரகாரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் 6 ல் சஞ்சரிப்பதுடன், 3ல் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்கி வரும். சனி ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் உங்கள் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை எளிதாக நடந்த வேலைகள் எல்லாம் இனி உங்கள் முயற்சிக்கேற்ப நடந்தேறும். குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு பதிவதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை பதிவதால் வரவு அதிகரிக்கும். எதிர்வரும் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியும். எத்தனை பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பதுடன், மற்றவரை நம்பி எந்த ஒரு செயலையும் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 11
அதிர்ஷ்ட நாள்: 19, 21, 28, 30, ஜூலை 1, 3, 10, 12
பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட வாழ்க்கை சுபிட்சமாகும்.