பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
10:04
மதுரை: சித்ரா பவுர்ணமியன்று, நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுவதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி ஏப்.25ல் வருகிறது. அன்று அதிகாலை 6:00 மணிக்கு, கள்ளழகர் வைகையில் இறங்குகிறார். அன்று நள்ளிரவு 1.19 மணிக்கு, சந்திர கிரகணம் ஆரம்பித்து, 1.55 மணிக்கு, முடிகிறது. கிரகண நேரம் 36 நிமிடங்கள். சித்ரா பவுர்ணமியன்று இரவில், அழகர் பல மண்டகப்படிகளில் எழுந்தருளி வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு, நள்ளிரவு வேளையில் செல்வார். இந்த ஆண்டு, கிரகணம் இருப்பதால், இரவு 9:00 மணிக்கே அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வழியில், தாமதமானாலும் கூட 11:00 மணிக்குள் சென்று விடுவார். இரவு 1.55 மணிக்கு கிரகணம் முடிந்ததும், வீரராகவப் பெருமாள் கோயிலில், கிரகண பரிகார பூஜை நடத்தப்படும். மறுநாள், வழக்கம் போல் மண்டூக மகரிஷிக்கு, சாப விமோசனம் தரும் நிகழ்ச்சிக்காக, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார்.