பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
12:04
விருதுராயர் மெர்சி வீரபட்டம் கட்டி அக்கினி பரியேறிய வல்லவட்டு திருமலை ரகுராம அகண்டித லட்சுமி அலங்கிர்தாரண இம்முடி கனகராமைய சண்முக ராஜபாண்டியர் (அப்பப்பா... இது தான் முழுப்பெயராம்!). வயது 32. இவர் தான் வெள்ளியங்குன்றம் ஜமீன்! 32வது தலைமுறை. கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலர்களாக இருக்கும் இந்த ஜமீன் குடும்பத்திற்கு, இக்கோயில் விழாக்களில் மரியாதைகள் செலுத்தப்படுவது நூற்றாண்டுகளை கடந்த மரபு. ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழாவிற்கு, கள்ளழகர் மதுரை புறப்படுவதற்காக, கோயில் அறநிலையத்துறை சார்பில் இவர்களுக்கு தனி அழைப்பு விடுக்கப்படும். பல தலைமுறைகளாக இக் கோயிலில் இருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டு, கோயிலில் அழகர் புறப்படுவதற்கு முன் மரியாதைகள் செலுத்திய பின், இவர்களின் பாதுகாப்பில் அழகர், ஆபரணப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிகழ்வுக்குரிய சன்மானம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்காக, வெள்ளியங்குன்றத்திலிருந்து சாரட் வண்டியில், ராஜதோரணமாய், அழகர்கோவிலுக்கு ஜமீன் புறப்படும் போது, கிராம மக்களின் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது. அங்கிருந்து, அழகர் புறப்படும் போதும் அவரோடு அப்பன்திருப்பதி வரை வருகின்றார். அழகருக்கு பரம்பரை பாதுகாவலுக்காக, 2 பேர் அதற்கான முத்திரைகள் அணிந்து மதுரைக்கு பயணிக்கின்றனர். அழகர் புறப்பட்ட 6 வது நாள், மதுரை சேதுபதி மண்டபத்தில் நடக்கும் பூப்பல்லக்கு நிகழ்ச்சிக்கு முன்னதாகவும், ஜமீனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது. மதுரையில் இருந்து அழகர் மீண்டும் அழகர்கோவிலுக்கு புறப்பட்டு, அங்கு சேரும் வரை இவர்களது சேவையும் தொடர்கிறது. ஜமீன் ராஜபாண்டியர்... எங்கள் பரம்பரை, விஜயநகர பேரரசில் போர்ப்படை தளபதியாக இருந்தது. பல சூழல்களால் அங்கிருந்து 300 பேர் சரந்தாங்கி அருகே கனகராமையன் மேட்டு பகுதியில் வசித்து வந்தனர். அப்போது அழகர்கோவிலில் களவுகள் அதிகமானதால், வாளால் விழித்துறங்கும் சவுந்திரீகம் என்ற சுந்தர பாண்டியன் மன்னன் காலத்தில் இந்த பரம்பரையின் வீரம் அறிந்து, கோயில் காவல் பணியை ஒப்படைத்தது. இது 11ம் நூற்றாண்டில் நடந்தது. அதன் பின் சில காலகட்டங்களில் கோயிலின் முழுப்பொறுப்பையும், இப்பரம்பரை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து இப்போதும் இக்கோயிலின், பரம்பரை பாதுகாவலை செய்து வருகிறோம். எனது அப்பா ஈ.கே.புலிக்கேசி. தாத்தா காலத்திற்கு பின் சில காரணங்களால் நேரடியாக எனக்கு 18வது வயதில் ஜமீன் பட்டம் கட்டப்பட்டது, என்கிறார். அழகர் மதுரை புறப்படும் போதும், திரும்பும் போதும் அழகர்மலையான் கால்படாத இடம் எது என ஒரு விடுகதை சொல்லும் வழக்கம் உண்டு. இந்த இடம் அப்பன் திருப்பதியில் உள்ள 16 கால் மண்டபம் பகுதி. இங்கு அழகர் ரோட்டில் செல்லாமல் மண்டபத் திற்குள் நுழைந்து செல்கிறார். அழகருக்கு இங்கு நடக்கும் உற்சாக வரவேற்புகளும் இந்த ஜமீன் தலைமையில் நடப்பது சிறப்பு. ஜமீனிடம் பேச 98431 98602ல் அழைக்கலாம்.