பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
பழந்தமிழரின் வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டுமா... இலக்கியங்களுக்குள் இணைந்து போனால் பண்பாடு, மொழி, கலாசாரம், பழக்க, வழக்கங்களை பரவசத்தோடு தெரிந்து கொள்ளலாம். மதுரையில் மாசித் திருவிழாவும், அழகர்கோவிலில் சித்திரை திருவிழாவுமாக இருந்ததாக, வரலாற்றுத் தகவல்கள் வழிமொழிகின்றன. இலக்கியங்களில் சித்திரை இருந்ததா... பதிவு செய்கின்றனர், பேராசிரியர்கள்.
பேராசிரியர் சொ.சொ.மீனாட்சிசுந்தரம்: இலக்கியங்களில் சித்திரை திருவிழா இல்லை. வேனிற் திருவிழா தான் கொண்டாடப்பட்டது. ராஜாக்கள் கொண்டாடும் இந்திர விழா இருந்தது. பின்னாளில் சமுதாய விழாவாக கோயிலுக்கு மாற்றப்பட்டது. திருஞான சம்பந்தர் மயிலை திருப்பதிகத்தில் நிறைய திருவிழாக்களைப் பற்றி கூறியிருப்பார். மாசித் திருவிழாவைப் பற்றியும் கூறப்படுகிறது. மதுரையில் மாசி மாதத்தில் தான் திருவிழா கொண்டாடப்பட்டது. அதற்காகவே மாசி வீதிகள் உருவாக்கப்பட்டன. கடந்த 400 ஆண்டுகளாகத் தான் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
பேராசிரியை யாழ்.சந்திரா: அகநானூற்றில் வேனிற்காலம் பற்றி கூறப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது வேறு வேலை செய்ய முடியாது. அந்த நேரங்களில் மக்கள் மலர்ச்சோலை, குளக்கரை, நீர்த் தடாகங்களைத் தேடி, தங்கினர். அதை ஓய்வு நேரமாக களித்ததாக, திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படுகிறது. அப்போது சந்தனத்தை உடலில் பூசிச் சென்றனர். மலர்களோடு தங்களை தொடர்பு படுத்திக் கொண்டனர். அதனாலேயே புனித நீராடுதலும் சேர்ந்து கொண்டது. திருமலை நாயக்க மன்னர் காலத்தில்தான் மாசித் திருவிழா, சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. மாசி மாதம் அறுவடை நேரமாக இருக்கும். மக்களுக்கு ஓய்வு குறைவு. சித்திரையில் வெயில் இருப்பதால், அதை திருவிழா நேரமாக மாற்றினார். சைவத்தையும், வைணவத்தையும் இணைத்த பெருமை அவரையே சேரும். அதற்கு முன் வரை, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் முதலில் சோழவந்தான் தேனூரில் தான் இறங்குவார். மன்னர் அதையும் மாற்றினார். தேனூருக்கு போகாமல், நேரே புதூர் வழியாக மதுரைக்கு வரும்படி ஏற்பாடு செய்தார். தேனூர் மக்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக, மதுரை தல்லாகுளத்தில் தேனூர் மண்டகப்படி அமைக்கச் செய்து, அழகரை எழுந்தருளச் செய்தார், என்றார்.