பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
எந்த வீட்டில் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அதை கோயில் என்று சொல்லலாம். கோயிலுக்குச் சென்றால் மனம் ஒருமைப்படுவது போல, பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்து குழந்தைகளும் ஒற்றுமையைக் கடைபிடிப்பார்கள். கண்ணன் ஆண்ட துவாரகையில் வீட்டுக்கு வீடு தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். அந்த ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, பல வீடுகளில் அவர்கள் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். சிவிறி, பந்து எனப்படும் நீர் விளையாட்டுக் கருவிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்குள் தண்ணீரை அடைத்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்து சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குசேலர் இந்தக் காட்சியைப் பார்த்து மனம் மகிழ்ந்தபடியே சென்றார். நல்லாட்சி நடக்கும் நாட்டில் தானே மகிழ்ச்சி இருக்கும்! அதிலும், தன் நண்பன் ஆளும் நாட்டில் இப்படி ஒரு நிலை என்றால், அவரோடு படித்த குசேலருக்கு பெருமையாக இருக்காதா என்ன! அவர் தொடர்ந்து சென்றார். ஒரு தெருவில் மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது. தேர்கள் அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தன. சில இடங்களில் பல தேர்கள் ஒன்றையொன்று ஒட்டிச் சென்றதால் ஏற்பட்ட இடநெருக்கடியால், அவர் எங்கும் புக முடியாமல் ஓரமாக ஒதுங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. மக்கள் நெருக்கமாக சென்ற போது, குசேலரை அவர்கள் உரசியபடி செல்ல வேண்டியதாயிற்று. அவர்கள் தங்கள் உடலில் சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட நறுமணப் பொருட்களைப் பூசியிருந்தனர். குசேலரின் கிழிந்த ஆடையிலும் அது பட்டதால், பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் போல் என்பது போல குசேலரின் உடையும் மணத்தது. குசேலர் தன் ஊரில் இருந்து புறப்பட்டு, இங்கு வந்து சேரும் வரை என்ன பாடுபட்டார்... கால் வலி கடுமையாக இருந்தது. ஆனால், துவாரகை வந்து சேர்ந்ததும் பாதிக்களைப்பு மறைந்தது.
ஊரின் நிலையைப் பார்த்ததும் மீதிக்களைப்பும் ஓடி விட்டது. கஷ்டப்பட்டு வேலை பார்த்தால் களைப்பு வரும். இஷ்டப்பட்டு பார்த்தால் களைப்பு வருமா? இதேநிலை தான் குசேலருக்கும்! மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் போது, எப்பேர்ப்பட்ட புறச்சூழ்நிலையும் மனிதனைப் பாதிப்பதில்லை. சாதாரண மனிதனுக்கே இப்படியென்றால், குசேலர் போன்ற பக்குவப்பட்ட ஆன்மாக்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை.ஒரு வழியாக கண்ணபிரான் குடிகொண்டிருந்த அரண்மனை வாயிலை குசேலர் அடைந்தார். அங்கே பஞ்சவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. கிருஷ்ணரைக் காண வந்திருந்த மன்னர்கள் தங்கள் கால்களில் அணிந்திருந்த வீரச்சிலம்புகள் எழுப்பிய ஒலி, அந்த இசைக்கு தாளம் எழுப்பியது போல் இருந்தது. எங்கும் ஒரே கூட்டம்.குசேலருக்கு மீண்டும் மனதில் தயக்கம். இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால், கண்ணனை நாம் தரிசிப்பதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகிவிடும் போல் தெரிகிறதே! இவர்கள் அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்களைப் பார்த்தால் சேவகர்கள் அவர்களைத் தானே முதலில் அனுமதிப்பார்கள்! நம் நிலைமை என்னாவது? நம் ஊர் கோயிலிலேயே பட்டுவேட்டி கட்டி. பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்து நிறைய சங்கிலி அணிந்து வந்தால் முதல் ஆளாக சுவாமி முன்னால் நிறுத்தி விட்டு, நம்மை பொது தரிசனம் பக்கமாக விரட்டி விடுவார்களே! இங்கே மன்னாதி மன்னர்களெல்லாம் வரிசையில் நிற்கிறார்கள்! நமக்காவது கிருஷ்ண தரிசனம் கிடைப்பதாவது. சரி...வருவது வரட்டும். வரிசையில் நின்று விடுவோம், என்று நினைத்தபடியே வரிசைக்கு சென்ற வேளையில், சில வீரர்கள் வாளை கையில் ஏந்தியபடி, உம்...ஓரம்...ஓரம்...மகாராஜா வருகிறார்... ஓரம்.. ஓரம்.. என்று எச்சரித்தபடியே சரேல் பாய்ச்சலில் ஓடிவந்தனர். பின்னால், ஏதோ ஒரு நாட்டின் மகாராஜா படைவீரர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார். அவர்களின் வாள் மின்னியதைக் கண்டு குசேலர் பயந்தே போய்விட்டார்.
ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டார்.இந்தக்காலத்தில் மட்டுமல்ல! எந்தக் காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் ஊருக்குள் வந்தால் சாதாரண மக்களுக்கு தொல்லையாகத் தான் இருந்துஉள்ளது போலும்!அந்த பரபரப்பு அடங்கியதும், மீண்டும் வரிசையில் இணைந்து கொள்ள முயன்றார் குசேலர். அப்போது, கண்ணனைக் காண வந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர். யாரோ ஒரு ராஜா கண்ணனுக்கு கொண்டு வந்த காணிக்கைப் பொருளை வேடிக்கை பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர். காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு தடிகளுடன் பாய்ந்தனர். அதைக்கண்ட கூட்டம் சிதறி ஓட அதற்குள் சிக்கிக் கொண்ட குசேலரும் ஓட வேண்டியதாயிற்று. மீண்டும் ஒதுங்கி நின்ற போது அதிர்ஷ்டம் அவரைத் தேடி வந்தது. மகாராஜா ஒருவரை காவலர்கள் சிலர் அழைத்து வந்தனர். அப்போது அவ்விடத்தில் நெரிசல் ஏற்பட்டது. இடிபாட்டில் குசேலரும் சிக்கிக் கொண்டார். அவரை ஒதுங்கி நில்லுமையா என்று அதிகாரத்துடன் சில படைவீரர்கள் பேசினர். ஆனால், குசேலரால் ஒதுங்க முடியாத அளவுக்கு நெரிசல்.நீர் ஒதுங்கி நிற்கிறீரா! இல்லை! உம்மை அப்படியே தள்ளிக்கொண்டு போகட்டுமா! என்று கேட்ட படைவீரன் ஒருவன் சற்றும் காத்திராமல், அவரை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டான். குசேலர் அந்த நெரிசலில் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பலமற்ற ஒல்லியான உடலையுடைய அவர் மூச்சுவிட கூட சிரமப்பட்டார். கூட்டத்தில் குசேலர் சிக்கிக் கொண்டார். கைகள் ஒடிந்து விடுமோ என்ற நிலை! எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டார். வியர்வை கொட்டியது. அந்தக் கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது. என்ன ஆச்சரியம்! இப்போது நெரிசல் சற்று குறைந்து விசாலமான ஒரு இடத்தில் அவர் நின்றார்.ஆஹா... இங்கேயே வந்து விட்டோமா! அவரது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.