பதிவு செய்த நாள்
28
மார்
2016
05:03
சிவபெருமானின்திருமணத்தின் போது, தென்கோடி மக்கள்அனைவரும், சிவபார்வதி திருமணக்கோலம் காண, வடக்கிலுள்ள இமயமலையில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரைதென்கோடிக்கு, சிவபெருமான் செல்லப் பணித்தார். சிவபார்வதியின் திருமண நிகழ்ச்சியை காண முடியாதே என அகத்தியர் வருந்தினார். அப்போது சிவன் அவரிடம், நான் உமக்கு, அங்கேயே திருமணக் கோலத்தில் காட்சியளிப்பேன், என அருளினார். இதையடுத்து தென்திசை வந்த அகத்தியரை, இடும்பாசுரன் என்பவன் எதிர்கொண்டு வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டினான். அகத்தியரும் அவனை சிஷ்யனாக ஏற்றார்.அகத்தியர் அவசரமாக கிளம்பிய போது, தான் சிவபூஜை செய்யும் லிங்கத்தை அங்குள்ள மலையிலேயே விட்டு வந்து விட்டதாகவும், அதை விரைவில் சென்று எடுத்துக் கொண்டு தெற்கிலுள்ள பொதிகை மலைக்கு வரும்படியும் இடும்பனுக்கு உத்தரவிட்டார்.
வடக்கே சென்ற இடும்பன், அவர் குறிப்பிட்ட மலையில், சிவலிங்கம் எங்குள்ளது எனத்தெரியாமல், சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளைப் பெயர்த்து, காவடி போல கட்டி சுமந்து கொண்டே சென்னிமலை வந்தான்.அப்போது துவாபரயுகம். சென்னிமலையை அந்த காலத்தில் புஷ்பகிரி என்று அழைத்தனர். இடும்பன் அங்கு வந்து, பொதிகைக்கு செல்ல வழி அறியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது, முருகப்பெருமான், ராஜகுமாரனாக காட்சியளித்து, இடும்பனுக்கு வழிகாட்டி அருளினார். அந்த இடமே புஷ்பகிரி என்னும் சென்னிமலை. அவனுக்கு முன்னாலேயே பழநி வந்து விட்ட முருகன், பழநியில் அவன் இளைப்பாறிய போது, சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டு காவடியைத் துõக்க விடாமல் செய்து விட்டார். அந்த மலையிலேயே அவர் தங்கி விட்டார். அதுவே பழநி என்னும் பெயர் பெற்றது. இதனால், சென்னிமலையை, ஆதிபழனி என்பர். இங்கு மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் வீற்றுள்ளார்.