பதிவு செய்த நாள்
06
ஜன
2018
04:01
காஞ்சிபுரம் காமாட்சி கோயில் விமானத்தில் தங்க பூச்சு உதிர்ந்து, செம்பு மயமாக காட்சியளித்தது. மறுபடியும் தங்க முலாம் பூசி, அதை ஒளி வீசச் செய்ய ஆவல் கொண்டது பரமாச்சாரியாரின் மனம். பொற்கொல்லர் ஒருவரிடம் விமானத்துக்குத் தங்க முலாம் பூச, எத்தனை பவுன் தங்கம் தேவை எனக் கேட்க, கணக்கிட்டு சொன்னார். தங்கம் வாங்க தேவையான பணம் மடத்தில் அப்போது இல்லை. அந்த சமயத்தில் ஒருநாள் பாடகர் மகாராஜபுரம் சந்தானம், சுவாமிகளை தரிசிக்க வந்தார். அங்கே ஏராளமான தாய்மார்கள் கூடியிருந்தனர். மகாராஜபுரம் சந்தானம் ஆனந்தமாக பாடி அனைவரையும் மகிழ்வித்தார். நிறைவாக அவரிடம் சுவாமிகள், ""காமாட்சி அம்மன் விமானத்திற்கு முலாம் பூச, தங்கம் தேவைப்படுகிறது. அவ்வளவு தங்கத்திற்கு எங்கே போவது? ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய போது பொன்மழை பொழிந்ததே? உனக்கு கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமல்லவா... இப்போது பாடு. இங்குள்ள பெண்களும் உன்னுடன் சேர்ந்து பாடட்டும் என்றார்.
சுவாமிகளின் கட்டளையை ஏற்று அனைவரும் பாடினர். முடிவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பெண்களும் வரிசையாக தங்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழற்றி, சுவாமிகள் முன்பிருந்த மூங்கில் தட்டில் வைக்கத் தொடங்கினர். பொற்கொல்லரை அழைத்து தங்கம் எவ்வளவு இருக்கிறது என எடை பார்க்கச் சொன்னார் சுவாமிகள். அவர் எவ்வளவு பவுன் தங்கம் தேவை என்று சொன்னாரோ அதில் சிறிதும் குறையவோ, கூடவோ இல்லை. சரியான அளவு தங்கம் கிடைத்தது. அம்பிகை நிகழ்த்திய அதிசயம் கண்டு வியந்த சுவாமிகள், திருப்பணியை துவக்க உத்தரவிட்டார். தாய்மார்களின் கொடை உள்ளத்தை பாராட்டிய சுவாமிகள், கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி அம்பாளை ஆராதித்தால் தங்கமழை பொழியும் என்பது நிரூபணமானதை எண்ணி மகிழ்ந்தார். சுதந்திரப் போரில் காந்திஜியிடம் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்த தாய்க்குலம் போல, காமாட்சியம்மன் திருப்பணிக்காக நகைகளை அர்ப்பணித்தது கண்டு அன்பர்கள் மனம் நெகிழ்ந்தது. - திருப்பூர் கிருஷ்ணன்