பதிவு செய்த நாள்
20
மார்
2018
05:03
லட்சுமி, நம் வீட்டுக்கு வரமாட்டாளா என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அவள், பூலோகத்தில் தானாகவே விரும்பி தங்கிய இடம் தான், திருச்சி - ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவெள்ளரை! ஒருமுறை, மகாலட்சுமியிடம் பெருமாள், உன் கருணையால், நான் உட்பட பாற்கடலில் உள்ள அனைவரும் சந்தோஷமாக உள்ளோம்; இப்படிப்பட்ட பாக்கியத்தை எங்களுக்கு தந்துள்ள உனக்கு, வரம் தர விரும்புகிறேன்; ஏதேனும் கேள்... என்று சொன்னார்.
தாயுள்ளம் கொண்ட மகாலட்சுமி, பெருமாளே... தேவலோகத்தில் உள்ளவர்கள் துக்கமின்றி வாழ்வதுபோல், பூலோகத்திலும் என் மக்கள் துக்கமின்றி வாழ, அனுக்ரஹம் செய்ய வேண்டும். நான் எங்கு தங்கினால், உலகிலுள்ள அனைத்து மக்களின் துக்கமும் ஓடிவிடுமோ, அப்படிப்பட்ட ஒரு இடத்தை அடையாளம் காட்ட வேண்டும்... என்றாள். அவளிடம், பெருமாள் நீ, பூலோகத்தில், உனக்கு பிடித்த இடத்தில் தங்கு; நான், சிபி சக்கரவர்த்திக்கு தரிசனம் தருவதற்காக பூலோகம் வர உள்ளேன். அப்போது, உன் ஆசையை நிறைவேற்றுகிறேன்... என்றார். அதன்படி மகாலட்சுமி, பூலோகம் வந்து, பூங்கிணறு என்ற குகையில் தங்கி தவம் செய்தாள். மன்னர் சிபி சக்கரவர்த்தி, தன் குருவான வசிஷ்டரிடம், பிறப்பற்ற நிலையை அடைய உபதேசம் செய்யும்படி கேட்டார். யார் ஒருவர், தன் குல தர்மப்படி நடந்துகொள்கிறாரோ, அவருக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும். மன்னனான நீ, துஷ்டர்களை அழித்து, மக்களை நல்ல முறையில் காத்து வந்தாலே போதும்; பிறப்பற்ற நிலைக்குரிய மோட்சத்தை அடையலாம்... என்றார், வசிஷ்டர்.
இச்சமயத்தில், மாரீசன் மற்றும் ராவணன் என்ற அரக்கர்கள், முனிவர்கள் நடத்தும் யாகங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாக செய்தி வரவே, தன் படையுடன் சென்று, நீலிவனம் என்ற காட்டில் தங்கினார், மன்னர், சிபி. அப்போது, வெள்ளைப் பன்றி ஒன்று தென்படவே, அதைப்பிடிக்க முயன்ற போது, சுவேதகிரி என்ற மலையின் மீது ஏறி, ஒரு புற்றில் மறைந்தது, அப்பன்றி. தன் படையுடன் மலையைச் சுற்றி வந்தார், மன்னர். அங்கே மார்க்கண்டேயர் என்ற முனிவர் இருந்தார்; அவரிடம் நடந்ததைச் சொன்னார், மன்னர். நீ மகா புண்ணியவான்; வராக(பன்றி) அவதாரம் எடுத்த பெருமாள் தான் உன் கண்ணில் தென்பட்டிருக்கார். இத்தனை காலம் தவமிருக்கும் எனக்கு கூட அவரது இந்த தரிசனம் கிடைக்கவில்லை. எந்தப் புற்றில் பன்றி மறைந்ததோ அதற்கு பாலபிஷேகம் செய்... என்றார். அரசனும் அவ்வாறே செய்ய, அவருக்கு காட்சியளித்தார், பெருமாள். அந்த இடத்தில், ஒரு கோவிலைக் கட்டினார் மன்னர். இதன்பின், லட்சுமிக்கு தரிசனம் தந்து, அதே இடத்தில் தங்கினார். அவ்வூரே, திருவெள்ளரை!
இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக 3,700 அந்தணர்களை குடும்ப சமேதகராக வரவழைத்தார், மன்னர். வரும் வழியில் ஒரு அந்தணர் இறந்து விட்டார். கும்பாபிஷேகம் தடைபட்டு விட்டதே என, மன்னர் கலங்கிய வேளையில், மற்றொரு அந்தணர் வந்தார். அவருடன் சேர்த்து மீண்டும் 3,700 ஆகிவிடவே, கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கடைசியாக வந்த நபர் யார் என, மன்னர் தேடிய போது, அவரை காணவில்லை. அப்போது பெருமாள் தோன்றி, நானே இங்கு வந்து கும்பாபிஷேகம் செய்து வைத்தேன்... என்றார். சுவாமியின் பெயர் புண்டரீகாக் ஷப்பெருமாள்; இதற்கு, தாமரை முகம் கொண்டவர் என பொருள். தன் மனைவிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அத்தலத்தில் நடக்கும் விழாக்களின் போது, லட்சுமி முன் செல்ல, தான் பின்னால் வருவதாக வரமளித்தார், பெருமாள். அதன்படி, விழாக்களில் லட்சுமியே முன்னால் எழுந்தருள்வாள். கோவிலின் பட்டா கூட லட்சுமி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் இரண்டு வாசல்கள் உள்ளன; தை முதல், ஆனி மாதம் முடிய உத்ராயண (வடக்கு) வாசலும், ஆடி முதல், மார்கழி முடிய தட்சிணாயண (தெற்கு) வாசலும் திறந்திருக்கும். ஒரு வாசல் திறந்திருக்கும் போது, இன்னொரு வாசல் மூடப்பட்டு விடும். 18 படி ஏறி கோவிலுக்குள் செல்ல வேண்டும். ஸ்ரீரங்கத்தில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது, இக்கோவில்!