விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் விருபாக்கன், சுபவிரதை என்ற அந்தணத் தம்பதிகளுக்கு கௌரி என்ற தெய்வீக குழந்தை பிறந்து வளர்ந்தது. சிறு வயதிலேயே கௌரி பராசக்தியின் மந்திரத்தைக் கற்று ஜெபித்து வந்தாள். ஒரு நாள் வைணவப்பிரம்மச்சாரி ஒருவன் பிச்சை கேட்டு விருபாக்கனின் வீட்டிற்கு வந்தான். விதி விளையாடத் தொடங்கி விட்டது. பிச்சை கேட்டு வந்தவனின் குலம், கோத்திரம், குடிபிறப்பு பாராது தன்மகளை அவனுக்குத் தர விரும்பி மந்திரத்துடன் தாரை வார்த்தான். மகளை மணமுடித்துத் தந்து சீர் சிறப்புடன் அனுப்பி வைத்தான்.
பிரம்மச்சாரியின் பெற்றோர் வைணவர், சைவ சமயத்தவளான மருமகளை வெறுத்தனர். ஒருநாள் அவர்கள் வெளியூர் செல்லும்போது கௌரியை வீட்டில் விட்டுப் பூட்டி விட்டுச் சென்றனர். சிவ தரிசனத்திற்கு ஏங்கி, சிவ சிந்தனையுடன் தனியே இருந்தாள் கௌரி. அப்போது
சோமசுந்தரக் கடவுள் வயோதிக வேடம் பூண்டு கௌரியின் வீட்டினுள் நுழைந்தார். சிவனடியாரை வரவேற்றாள் கௌரி. உணவு கேட்டார் சிவனடியார். வீடு பூட்டி இருப்பதைக் கூறினாள் கௌரி. பூட்டை நீ ""தொட்டால் திறந்து கொள்ளும்! என்றார் சிவனடியார். அவ்வாறே சமயலறை பூட்டு திறந்து கொண்டது. நொடியில் அறுசுவை உணவு சமைத்து விருந்திட்டாள் கொளரி.
உணவு சமைத்து முடிந்ததும் வயோதிகர் இளைஞனாக மாறினார்! கற்புக்கரசியான கௌரி அது கண்டு நடுங்கினாள். அச்சமயம் வெளியூர் சென்ற மாமனும் மாமியும் திரும்பி வந்தனர். அக்கணமே இளைஞன் பச்சைக் குழந்தையாக மாறித் தரையில் தவழ்ந்தது. குழந்தையைக் கண்ட மாமி ""இது ஏது? என்றாள். ""தேவதத்தன் தன் மனைவியுடன் வந்து சிறது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச்சென்றான்! என்று கூறினாள் கௌரி. சைவக் குழந்தை என்று அறிந்ததும் மாமி சீறினாள். குழந்தையுடன் கௌரி வீட்டை விட்டே விரட்டினாள்.
தெருவிற்கு வந்த கௌரி திகைத்தாள். இறைவனைத் தியானித்தாள். அக்கணமே ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் காட்சி அளித்தார் சோமசுந்தரக் கடவுள். அவரது அருட்கருணையால் கௌரி உமாதேவியுடன் இரண்டறக் கலந்தாள். இக்காட்சியைக் கண்டவர்கள் மெய்மறந்தனர்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »