குலோத்துங்க பாண்டியனின் மகன் அனந்த குண பாண்டியனின் காலத்தில் பாண்டிய நாடு சிவபெருமானின் திருவேடம் போல் திகழ்ந்தது. இதனால் பொறாமை கொண்ட சமண முனிவர் எண்ணாயிரவரும் ஒன்று கூடி பாண்டியனை அழிக்க வேள்வி இயற்றினர். அவ்வேள்வித் தீயில் கொடிய அரக்கன் தோன்றினான். அவனிடம் “பாண்டியனையும் மதுரையையும் விழுங்கி விட்டு வருமாறு” ஆணை இட்டனர். அவ்வரக்கன் தேவர்களும் நவக்கிரகங்களும் அஞ்சும் கொடிய பாம்பின் உருவம் தாங்கி மதுரை நகரின் மேற்குத்திசை நோக்கிப் புறப்பட்டான்.
உலகத்தையே விழுங்கி விடுவதுபோல் தன் பெரிய வாயைத் திறந்து கொண்டும் விஷ மூச்சு விட்டுக்கொண்டு வரும் பாம்பைக் கண்டு அஞ்சிய மக்கள் மன்னரிடம் முறையிட்டனர். சோமசுந்தரக் கடவுளைத் தொழுது அவரது கருணைத் துணையுடன் தனியாய் வில்லும் அம்புமாய்ப் புறப்பட்டான் பாண்டியன். கொடிய அம்பை விட்டு பாம்பைக் கொன்றான். துடித்து விழுந்த பாம்பு இறக்கும்போது கொடிய ஆலகால விஷம் போன்ற நஞ்சினைக் கக்கியது. விஷம் நகர் முழுவதும் பரவி மக்கள் அனைவரும் உடல் தம்பித்து உயிர் ஊசலாட மயங்கினர். இது கண்டு அஞ்சிய பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். கருணாகரனான அவன் தனது திருமுடி மீது அமர்ந்துள்ள சந்திரன் அமுதங்களில் ஒரு துளியை மதுரை நகரி மீது சிந்தச் செய்தான். அமுதம் விஷத்தின் வலிமையை ஒடுக்கி நகரை தூய்மை ஆக்கியது. மக்கள் பழைய நிலை பெற்று எழுந்தனர்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »