பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
அவிட்டம் 3,4 ம் பாதம்: கர்ம காரகனான சனி, சகோதர காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிநாதன், நட்சத்திரநாதன் இருவரும் ராசிக்குள்ளேயே சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிநாதனான சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் நீச்சமடைவார். உங்கள் ராசிக்குள் செவ்வாய் பகையாவார். ஒருவர் வேகமானவர், மற்றவர் நிதானமானவர். எதிர்மறையான குணம் கொண்ட இருவரும் ஒரே இடத்திற்குள் சஞ்சரிப்பதால் ஒருபக்கம் உழைப்பின் மீது ஆர்வமும் முன்னேற்றத்தின் மீது அக்கறையும் ஏற்படும். அதே சமயம் தடையும் தாமதமும் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்றாலும் கோச்சார ரீதியாக ஜென்ம ராசிக்குள் அவர் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்குவார் என்பதால் இக்காலத்தில் நண்பர்கள், வாழ்க்கைத் துணையிடமும் எதிர்மறையான நிலை ஏற்படும். நன்கு பழகியவர்களும் உங்களைவிட்டு விலகிச் செல்வர். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புதனும் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் சங்கடங்களில் இருந்து விடுபடலாம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். பெண்கள் தங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குரு பகவானின் பார்வை களத்திரம், லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் பின்விளைவு பற்றி யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் உயரும். தொழிலில் லாப நிலை இருக்கும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காட்ட வேண்டும். அவசரப்பட்டு எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம். அது சங்கடத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 25,26
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,27, ஏப். 8,9
பரிகாரம்: வராகியை வழிபட்டால் அல்லல் தீரும். தீமை விலகும்.
சதயம்: ஆயுள்காரகன், நீதிக்காரகனான சனி, யோக, போக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிநாதன் ராசிக்குள் சஞ்சரித்து நெருக்கடியை உண்டாக்கினாலும் குருவின் பார்வைகளால் விருப்பம் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் ராகு, சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். உடல் நிலையில் கவனம் தேவை. இரவு பயணங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்களிடம் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் ஒருவிதமான அவசரம் இருக்கும். படபடப்பு, டென்ஷன் ஏற்படும் என்றாலும், பின்விளைவுகளை யோசித்து செயல்படுவது நன்மை தரும். அலுவலகப்பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது பிரச்னையைத் தவிர்க்கும். உழைப்பாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் வேறு சிந்தனைகள் இப்போது வேண்டாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தை கவனமாக நடத்திச் செல்வீர்கள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளிடம் வேகம், படபடப்பு எல்லாம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது விருப்பம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 26,27
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,22,31, ஏப். 4,8,13
பரிகாரம் நவக்கிரக வழிபாட்டால் நன்மை பெருகும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: நீதி, நியாயத்திற்கு காரகனான சனி, ஞானத்திற்கும் அந்தஸ்திற்கும் காரகனான குரு பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனிப்பட்ட ஆற்றலும், விவேகத்துடன் செயல்பட்டு வெற்றிபெறக் கூடிய சக்தியும் இருக்கும். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் சப்தம, பாக்கிய, லாப ஸ்தானங்களில் பதிவதால் நட்புகள், வாழ்க்கைத் துணையால் நன்மை அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். பெரியோர்களால் காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும் என்றாலும் தவறான வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அது சங்கடத்தை ஏற்படுத்தும். பணியில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. அரசியல்வாதிகள் யோசித்து செயல்படுவதால் நினைத்ததை சாதித்துக் கொள்ளமுடியும். செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். மாணவர்கள் பொதுத்தேர்வை கவனத்தில் கொண்டு படிப்பில் அக்கறை செலுத்துவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 27,28
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,21,26,30, ஏப். 3,8,12
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை மனதில் நினைத்து வழிபட தடைகள் விலகும்.