பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
மீனம்; பூரட்டாதி 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் ஒவ்வொன்றிலும் நிதானம் அவசியம். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். அதே நேரத்தில் ஜீவன ஸ்தானத்தில் ஆத்ம காரகனான சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விரய சனியால் செலவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, வரவு செலவுகளில் எப்பொழுதும் கவனம் வேண்டும். கடன் கேட்பவர்களை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நண்பர்களில் ஒரு சிலர் இக்காலத்தில் உங்களுக்கு தவறான வழிகாட்டலாம். அதனால் நீங்கள் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுப்பது நல்லது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 25.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 30. ஜன. 3, 12.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி; குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல், நினைப்பதை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் செலவுகளை பல வழியிலும் ஏற்படுத்துவார். வரவை விட செலவு அதிகரிக்கும். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பதிவதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். இக்காலத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையாகும். பாக்ய ஸ்தானத்திற்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர். பெரிய மனிதர்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைத்து நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் இருந்த தடைகள், குழப்பங்கள், பிரச்னை விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகவல் வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஜன. 1 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் நிலை முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். தொழிலாளர்கள் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். மாணவர்கள் கேளிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 26.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 21, 30, ஜன. 3, 8, 12.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை ஏற்படும்.
ரேவதி; புத்திசாலித்தனமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். புத பகவான் ஜன. 1 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். இந்த நேரத்தில் சுக்ரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். சனி பகவான் வரவை விட செலவை அதிகரிப்பார். குடும்ப ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதும், சப்தம ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதும் குடும்பத்தில் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தும். பிரச்னைகள் உருவாகும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய நண்பர்களை விட்டு விலகுவதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் பிரச்னைகளுக்கு இடம் கொடுக்காமல் போகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். அதன் காரணமாக சில தவறான நபர்களின் வழிகாட்டுதலை ஏற்க வேண்டியதாக இருக்கும். அதனால், உங்களுக்கு சங்கடங்களும் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செயல்களில் வெற்றியை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். தடைப்பட்ட வேலை நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக திட்டங்கள் தீட்டுவீர்கள். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும் அதற்குரிய வாய்ப்பும் வரும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பின் மீது முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 27.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 12.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.