வீரபாண்டியனுக்குக் காமக்கிழத்தியவர் பலர் இருந்தனர். அவர்கள் மூலம் பல குழந்தைகளைப் பெற்றான். ஆனால் பட்டத்தரசி மூலம் குழந்தைப் பேறே கிட்டவில்லை. கடவுளை வேண்டினான். தவம் இருந்தான். இறைவனின் அருளால் பட்டத்தரசி அழகிய ஆண்மகளைப் பெற்றாள்.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வேட்டையாடச் சென்ற வீரபாண்டியன் புலிக்கு இரையாகிப் பொன்னாடு போந்தான். அரசியும், காமக்கிழத்தியரும், மக்களும் துயருற்றனர். கிடைத்த பொன்னாபரணங்களையும், மகுடத்தையும் காமக்கிழத்தியரின் மக்கள் அபகரித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இளவரசனுக்கு முடி சூட்டவேண்டி பொக்கிஷத்தை திறந்தனர். முடியைக் காணவில்லை. முடி இன்றி முடி சூட்டுவது எப்படி? புதிதாய் முடி செய்ய உயர்ந்த மாணிக்கங்கள் வேண்டும்! எங்கே போவது?
கலங்கிய அமைச்சர் இளவரசனுடன் கோவிலுக்குச் சென்றனர். சோமசுந்தரனை வணங்கி வழி கேட்டனர். அவ்வமயம் இறைவன் வணிக வேடம் பூண்டு வந்தார். என்னிடம் உயர்ந்த நவரத்தினங்கள் உள்ளன! என்று கூறி அவற்றைக் காட்டினார். இவை வலன் என்ற அசுரனின் உடல் உறுப்புகள்! என்றார். திகைத்தனர் அமைச்சர்கள். ""அரக்கன் நவரத்தினங்களாக மாறியது எப்படி? என்று கேட்டனர். வணிகன் அந்த கதையைச் சொன்னான்.
வலன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்றான். அவ்வரத்தின்படி அவனைக் கொல்ல யாராலும் முடியாது. ஒருவேளை அவன் இறந்தால் அவனது உறுப்புகள் நவரத்தினங்களாக மாறும்!
வரம் பெற்ற வலன், இந்திரனுடன் போருக்குச் சென்று வென்றான். சூழ்ச்சியால் வலனைக் கொல்லக் கருதிய இந்திரன் அவனிடம் வரம் வேண்டினான். தர இசைந்து "என்ன வேண்டும் என்று கேட்டான். நான் செய்ய இருக்கும் யாகத்திற்கு நீ யாகப்பசுவாக வரவேண்டும்! என்று வேண்டினான் இந்திரன்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வலன் பசுவானான். யாகத்தில் கொல்லப்பட்டான். அவனது உறுப்புகள் நவரத்தினங்களாயின. இவற்றைக் கொண்டு முடி தயாரித்து முடிசூட்டு விழா நடத்து! என்று கூறிய வணிகன் மறைந்தான்.
""வந்தவன் மனிதனல்லன் தெய்வமே! என்றறிந்த அமைச்சர்கள் மகிழ்ந்தனர். முடி தயார் ஆயிற்று. முடிசூட்டு விழா நடந்தது. பாண்டியன் அபிஷேகப் பாண்டியன் என்னும் பெயருடன் நாட்டை ஆண்டு வந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »