உத்திராடம் 2, 3, 4ம் பாதம் : இந்த மாதத்தின் கிரக அமைப்பு பலமாக அமைவதால் செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள், ராசிநாதன் சனியின் ஆட்சி பெற்ற நிலையுடன் ராசியில் வலிமையான கிரகங்களும் இணைவு பெறுவதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனதிற்கு சரியெனத் தோன்றுவதை செய்துமுடிப்பீர்கள். தனாதிபதியின் நிலையும் துணை இருப்பதால் பொருளாதார ரீதியாக எவ்வித சிரமமும் உண்டாகாது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். தகவல்தொடர்பு சாதனங்களில் உண்டாகும் பழுது உங்களுக்கு சில சிரமங்களைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோரின் செயல்கள் சில தேவையற்ற தர்மசங்கடமான சூழலை உண்டாக்கக்கூடும். வண்டி, வாகனங்கள் ஆதாயத்தினைத் தரும். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத பிரயாணங்கள் செய்ய நேரிடும். தேவையற்ற சிந்தனைகளால் மனதில் லேசான குழப்பங்கள் தோன்றும். ஆயினும் ராசிநாதனின் வலுப்பெற்ற நிலையால் சுதாரித்துச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்கள் செல்வதற்காகத் திட்டமிடுவீர்கள். பிதுரார்ஜித சொத்துக்களில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் எழக்கூடும். உத்யோக ரீதியாக அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் கடும் உழைப்பினை வெளிப்படுத்தி அதற்கேற்ற ஆதாயத்தினைக் காண்பார்கள். நண்பர்களோடு இணைந்து செய்யும் கூட்டுத்தொழில் லாபத்தினைத் தரும். வியாபாரிகள் தொழில்முறையில் உள்ள நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் கொள்வார்கள். எதிர்காலம் பற்றி சிந்தனைகள் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு இறங்கிய காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கூட்டு முயற்சிகள் சிறப்பான லாபத்தினைத் தரும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயரக் காண்பீர்கள். திறமையான செயல்பாடுகளின் மூலம் நற்பெயரோடு சிறப்பான ஆதாயத்தையும் அடைவீர்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது. பரிகாரம் : சுவாமி ஐயப்பன் வழிபாடு. சந்திராஷ்டமம் : ஜன. 30
திருவோணம் : ராசியில் வலுவுடன் அமர்ந்திருக்கும் கிரகங்களின் துணையுடன் இந்த மாதத்தை சிறப்பான முறையில் துவக்க உள்ளீர்கள். தன்னம்பிக்கையுடன் கூடிய மன உறுதியுடன் செயல்பட்டு இறங்கிய காரியங்களில் வெற்றி கண்டு வருவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் சற்று பொறுமை காப்பது நல்லது. ராசியில் இடம் பெறும் சூரியன் உங்கள் வார்த்தைகளில் கடுமையை உண்டாக்குவார். நீங்கள் பேசும் நியாயமான பேச்சுக்கள் கூட உங்களுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவசியம். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழல் உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்களால் செலவுகளைக் காண்பீர்கள். குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். ஜன.யின் இறுதியில் எதிர்பாராத பிரயாண வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். முகம் மற்றும் கண்களில் உஷ்ணத்தினால் ஒரு சில நோய்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்கள் வாழ்வியலுக்கு சாதகமாக அமையும். அவரது உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களினால் ஆதாயம் உண்டாகும். தொழில் ரீதியாக சிறிது அலைச்சலைக் காண நேரிடும். திறமையான செயல்பாடுகள் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். கூட்டுத்தொழிலில் வியாபாரிகள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். வாழ்வியல் தரம் முன்னேறக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை நம்பி இறங்கிய செயல்களில் லேசான சுணக்கத்தினைக் காண்பீர்கள். விவேகம் நிறைந்த செயல்பாடுகள் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
அவிட்டம் 1, 2ம் பாதம் : ராசிநாதன் சனியின் ஆட்சி பெற்ற நிலையும், சூரியன், புதன், குரு ஆகிய கிரகங்களின் இணைவும் உங்கள் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்பட்டு தன்னால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் உதிக்கும். நட்சத்ர அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் வீண் பிடிவாத குணம் அதிகரிக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் பொருள் வரவு தேடி வரும். உங்கள் குரலுக்கு அனைவரும் செவி சாய்ப்பர். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களோடு லேசான கருத்து வேறுபாட்டிற்கு ஆளாவீர்கள். உடன்பிறந்தோரால் ஆதாயம் காண்பீர்கள். வண்டி, வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். பிரயாணங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படக்கூடும். கண் நோய் வரும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருக்கவும். முக்கியமான பிரச்னையில் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் செலவுகளுக்கு ஆளாவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் காண்பீர்கள். தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளானாலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுடன் நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் குறைந்த லாபத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உண்மையான உழைப்பால் உயர்வினைக் காண்பீர்கள். சிறுசிறு கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொருள் வரவு உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைத்து தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனதை ஆக்கிரமிக்கும் வீண் பிடிவாத குணம் உங்கள் மதிப்பைக் குறைக்கக் கூடும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 31
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »