இராஜசேகரின் மகன் குலோத்துங்கன் மதுரையை ஆண்டு வந்த போது அந்தணன் ஒருவன் திருப்பத்தூரில் இருந்து தன் மனைவியையும் கைக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மதுரையில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். வழியில் காட்டில் மரத்தடியில் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு நீர் தேடிச்சென்றான். சென்றவன் தண்ணீருடன் திரும்பி வரும்போது அம்பு பாய்ந்து இறந்து கிடக்கும் மனைவியையும் அருகில் வில்லும் கையுமாம் நிற்கும் வேடனையும் கண்டு அவனே தன் மனைவியைக் கொன்றவன் என்று முடிவு செய்தான். வேடனை அழைத்து மதுரைக்கு வந்தான். குலோத்துங்க பாண்டியனிடம் முறையிட்டான். வேடனோ ""தான் ஏதும் அறியா நிரபராதி என்று உறுதியாகக் கூறினான். தீர்ப்பைச் சில தினங்களுக்குத் தள்ளி வைத்த பாண்டியன் வேடனைச் சிறையில் இட்டான். சோமசுந்தரக் கடவுளை தரிசித்து ""நீதான் தீர்ப்பு கூற வழிகாட்ட வேண்டும்! என்று பிரார்த்தித்துக் கொண்டான். அக்கணமே
""பாண்டியா! செட்டித்தெருவில் நடைபெறும் திருமணத்திற்கு அந்தணனுடன் வா. அங்கே உண்மை புரியும் என்ற வான் ஒலி எழுந்தது. அவ்வாறே
திருமணத்திற்குச் சென்றனர். அங்கே இறைவனின் திருவருளால் எமதூதர்கள் இவர்கள் கண்ணில் பட்டனர். அவர்களது உரையாடல் இவர்களது செவிக்கும் எட்டியது.
எந்நோயும் இல்லாத இம்மணமகளின் உயிரை எக்காரணத்தை முன் வைத்து நாம் கவர முடியும்? என்று கேட்ட ஓர் எமதூதனுக்கு அடுத்தவன் கூறிய பதில் ""நேற்று காட்டில் ஆலமரத்தின் இலையில் முன்பே சிக்கி இருந்த அம்பை காற்று வீசச்செய்து வீழ்த்தி பார்ப்பிணியின் நெஞ்சில் பாய வைத்து அவளது உயிரை அபகரிக்கவில்லையா? அது போல ஏதேனும் தந்திரம் செய்வோம். அதோ! மாட்டுக்கொட்டியில் உள்ள பசு வெகுண்டு வந்து மணமகளைக் குத்திக் கொல்லச் செய்வோம்!.
இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் அந்தணனைப் பார்த்தான். உண்மை அறிந்த அந்தணன் தன்னை தாழ்த்திக் கொண்டான். சிறிது நேரத்தில் திருமண ஓசைகளால் மருண்டு ஓடி வந்த பசு எதிரே அமர்ந்த மணமகளை முட்டிக் கொல்வதையும் கண்டனர். அரண்மனை மீண்ட அரசன் அந்தணனுக்கு வேண்டும் பொருட்களைக் கொடுத்தான். சிறையில் இருந்த வேடனை விடுவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு நிரம்ப பொருள் தந்து இருரையும் வழி அனுப்பி வைத்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »